15 வயதுடைய சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்குள்ளாகிய நபர் கைது.
மட்டக்களப்பு, காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் 15 வயதுடைய சிறுமி ஒருவரைப் பாலியல் துஷ்பிரயோகத்துக்குள்ளாகிய குற்றச்சாட்டின் பேரில் 22 வயதுடைய இளைஞர் ஒருவர் நேற்று (27) திங்கட்கிழமை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை 15 வயதுடைய சிறுமி தனது வீட்டில் தனிமையில் இருந்த வேளையில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சிறுமியின் தந்தை வேலைக்குச் சென்றுவிட்டு வீடு திரும்பிய பின்னர், இச்சம்பவம் குறித்துத் தெரியவந்துள்ளது. அதனைத் தொடர்ந்து சிறுமியின் தந்தை காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
முறைப்பாட்டினை அடுத்து துரிதமாகச் செயற்பட்ட காத்தான்குடி பொலிஸார், அதே கிராமத்தைச் சேர்ந்த 22 வயதுடைய சந்தேக நபரை நேற்றையதினம் கைது செய்துள்ளனர்.
பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, குறித்த இளைஞர் கடந்த 03 வருடங்களாக அச்சிறுமியுடன் காதல் தொடர்பில் இருந்து வந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.
பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவ பரிசோதனைகளுக்காகவும் மேலதிக சிகிச்சைகளுக்காகவும் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான மேலதிக சட்ட நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் தொடர்பாக காத்தான்குடி பொலிஸ் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

Post a Comment