Header Ads

test

இன்றைய உலகமும் விஞ்ஞானமும் - கட்டுரை.

”ஒரு குத்துமதிப்பாக 3 லட்சம் வாகனங்கள், 8 மணி நேரத்திற்குள் நாளொன்றுக்கு இந்த சந்திப்பைக் கடக்கின்றன. இது வெறும் குத்து மதிப்புதான். இதில் ஒன்றும் பெரிய விஞ்ஞானம் இல்லை” – இப்படிப்பட்ட வாக்கியங்களைச் சாதாரணமாக இன்று கேட்கிறோம். தோராயமாக மதிப்பிடுதல், விஞ்ஞானத்திற்கு ஒத்துவராது என்பது சாமானியருக்கும் புரிகிறது.


“அந்தப் பத்து நிமிடங்களில், எந்த விஷயம், எப்படி நடந்தது, அவற்றின் வரிசை என்ன என்று துல்லியமாக தெரியாது. அவ்வளவு சரியாக எல்லாவற்றையும் சொல்ல நான் என்ன விஞ்ஞானியா?” – இதையும சாதாரண வாழ்க்கையில் நாம், பல நேரங்களில் கேட்கிறோம். இரண்டு விஷயங்களை, அவற்றைக் குறித்த முழுக் கவனம் இல்லாமலே, நாம் இத்தகைய குறிப்புகளில் பதிவு செய்கிறோம்- துல்லியமாக அளக்க சரியான விஞ்ஞானப் பயிற்சி தேவை, மற்றும் அளவிடலைச் சரியாக விளக்கவும் விஞ்ஞான அறிவு/பயிற்சி தேவை.

“கேள்வி மேல் கேள்வி கேட்டால் என்னிடம் என்ன பெரிய theory –ஆ இருக்கிறது? எனக்குத் தெரிந்ததைச் சொல்கிறேன். அதற்கு மேல் சொல்ல, நான் ஒன்றும் பெரிய ஐன்ஸ்டீன் இல்லை” – இதுவும், சில எரிச்சலான நேரங்களில் நாம் உபயோகப்படுத்தும் சாதாரண வாக்கியம். முரண்பாடில்லாமல், எத்தனை கேள்வி கேட்டாலும், சரியாக ஒரு கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்டு பதிலளிப்பது என்பது விஞ்ஞானப் பயிற்சியிருந்தாலே சாத்தியம் என நினைக்கிறோம்.

பல தருணங்களில், நாம் விஞ்ஞானத்தையும் தொழில்நுட்பத்தையும், வித்தியாசம் பார்க்காமல், குழப்பிக் கொள்கிறோம். பெரும்பாலும், தொழில்நுட்ப வளர்ச்சியை, விஞ்ஞான வளர்ச்சி என்று வியக்கிறோம். உதாரணமாக, செல்பேசிகளின் புதிய அம்சங்களை விஞ்ஞான வளர்ச்சி என்று குழப்புகிறோம்.

சாதாரண மனிதர்கள் வியக்கும் (குழப்பும்) அளவிற்கு வளர்ந்துள்ள விஞ்ஞானம், எப்படி இந்நிலையை அடைந்தது என்பதை ஆராய்வது சுவாரசியமான விஷயம். கடந்த 500 வருடங்களில் மனித சிந்தனை எப்படியெல்லாம் மாறி இருக்கிறது என்பதை நினைத்தால் மிகவும் பிரமிப்பான விஷயம். ஏறக்குறைய 200,000 ஆண்டுகளாக வாழ்ந்து வரும் மனிதரிடையே , கடந்த 500 வருடங்களில் ஏற்பட்ட சிந்தனை மாற்றம் என்பது எத்தனை பிரமிப்பானதாக நமக்குத் தோன்றினாலும் ஒப்பீட்டில் அது மிகச் சிறிய மாறுதலே. பூமியின் ஆயுட்காலத்தில் இந்த 500 வருடங்கள் நம் தனிவாழ்வில் ஒரு நிமிடத்தை ஒத்தவை. இப்படி ஒரு சிறுகாலத்தின் மாறுதல் எப்படி நம் கவனத்தில் அத்தனை பெரும் இடத்தைப் பிடித்தது என்பதை நாம் யோசிக்கலாம்.

ஆரம்பத்தில், விஞ்ஞானி என்ற சொல்லே கிடையாது. இதுபோன்ற விஷயங்களில் ஈடுபாடு கொண்டவர்களைத் தத்துவாளர் (philosopher) என்றே சொல்லி வந்தனர். ஏன், பதினேழாம் நூற்றாண்டில் வாழ்ந்த நியூட்டன் ஒரு தத்துவாளராகவே கருதப்பட்டார். இன்று, நாம் அவரை பெளதிக விஞ்ஞானி என்றே அனேகமாக அறிகிறோம். அவரென்னவோ பலகலை விற்பன்னராகவே இருந்திருக்கிறார்.

நியூட்டன் மற்றும் கலிலியோ, 16 மற்றும் 17 –ஆம் நூற்றாண்டு காலங்களில் வாழ்ந்த தத்துவ ஆராய்ச்சியாளர்கள். ஆரம்ப காலத்தில் லத்தீன் மொழிதான் தத்துவ ஆராய்ச்சியாளர்கள அதிகமாக உபயோகித்த மொழி. இன்றைய ஆங்கிலம் மிகவும் 16/17 –ஆம் நூற்றாண்டில் வளர்ந்திருந்தாலும் அவ்வளவாக உபயோகப் படுத்தப்படவில்லை. உதாரணத்திற்கு, நியூட்டன் ஒரு ஆங்கிலேயர்; அன்றைய துவக்க நிலை விஞ்ஞானத் தின் மேல் கொண்ட ஆர்வத்தால், லத்தீன் (Latin) மொழியை முழுமையாகக் கற்றுக் கொண்டார். அவருடைய பல ஆராய்ச்சிக் கட்டுரைகள் மற்றும் கணக்குகள், லத்தீன் மொழியிலேயே இருந்தன. ஆங்கிலம் படித்தால்தான் விஞ்ஞானம் கற்க முடியும் என்று சொல்பவர்களுக்கு, நியூட்டனின் வாழ்க்கை பற்றி தெரிந்திருக்க நியாயமில்லை!
isaacnewton_james

அதே நேரம் அன்று லத்தீன் மேலைச் சிந்தனைத் துறைகள் எல்லாவற்றுக்கும் பொது மொழியாக விளங்கியது. பன்மொழிக் கூட்டமாக அன்றும் இன்றும் விளங்கும் யூரோப்பியர் நடுவேயும், ஓரளவு பல கண்டங்களிடையேயும் அறிவுத்துறைகளில் கல்வி கற்கவும், ஆய்வுகள் நடத்திக் கிட்டிய முடிவுகளைப் பகிர்ந்து கொள்ளவும், பொதுவாக சிந்தனைப் பரிமாற்றத்துக்கொரு நல்ல பாதையாகவும் லத்தீன் விளங்கியது. இதற்கு இன்னொரு காரணம் யூரோப்பிய வரலாற்றுப் பாதை. ரோம சாம்ராஜ்யத்தின் அரசு மொழியாக, ஆட்சி மொழியாக, தவிர அரசால் போஷிக்கப்பட்ட பல கலைகளின் புழங்கு மொழியாக லத்தீன் விளங்கியதோடு நில்லாமல், அன்று மேலை உலகில் பெரும் சக்தியாக இயங்கிய ரோமன் கத்தோலிக்கக் கிருஸ்தவத்தின் புழங்கு மொழியாகவும் இருந்தது.

அன்று அரசுகளிலும், அரசியலிலும், சமூகங்களைக் கட்டுப்படுத்துவதிலும், மக்களிடையே நிலவிய மத நம்பிக்கைகளை ஒழுங்குக்குள் வைப்பதிலும் லத்தீன் மொழியே மைய மொழி, ஏனெனில் கத்தோலிக்க மத அமைப்பு பன்னாடுகளிலும் ஆட்சி மதமாக விளங்கியது.

இதே காரணங்கள் இன்றைய ஆங்கில மொழிக்கு இல்லை என்றாலும், சில காலம் முன்பு வரை உலகில் பெரும் சாம்ராஜய சக்தியாக விளங்கியது பிரிட்டிஷ் ஆட்சி. பல கண்டங்களில் பல நாடுகளை ஆண்ட பிரிட்டிஷ் அரசின் ஆட்சி மொழி ஆங்கிலம். இன்று உலகின் பெரும் சந்தை மொழியாகவும், ஆய்வுத்துறைகளுக்குப் புழங்கு மொழியாகவும், ஊடகங்களில் பெரும் பகுதியை ஆளும் மொழியாகவும், விளங்கும் ஆங்கிலம் உலகின் பெரும் சக்தியான அமெரிக்காவின் ஆட்சி மொழியும் கூட. தவிர உலக கல்வித் தளத்திலும், ஆய்வுத் தளத்திலும் அமெரிக்கப் பல்கலைகள் பிரதான இடத்தில் இருப்பதாலும் ஆங்கிலம் அறிவுத் துறைகளில் முக்கிய மொழியாக நிலவுகிறது. அந்த அளவில் அன்றைய லத்தீன் இருந்த இடத்தில் இன்று ஆங்கிலம் உள்ளது. என்றாலும் லத்தீன் மொழியை ஆங்கிலம் பிடித்துக் கொண்டதைப் போல இன்று வேறெந்த மொழியும் ஆங்கிலத்தின் இடத்தைப் பிடித்துக் கொள்ள தற்போதைக்கு வழியில்லை. ஆனால் பல நாடுகளின் பொருளாதார சக்தி கூடி அந்நாடுகள் மேலெழுந்து, கல்வி/ சிந்தனைத் துறையிலும் அந்நாடுகளின் பங்கு கூடும்போது அம்மொழிகள் மேலெழுந்து ஆய்வுத் துறைகளில் மாற்றுப் புழங்கு மொழியாகும் என்று நாம் எதிர்பார்க்கலாம்.

நியூட்டனுக்கும் முன் வாழ்ந்த கலிலியோ ஒரு இத்தலியர். அவர் வாழ்ந்த 16-17 –ஆம் நூற்றாண்டுகளில் கத்தோலிக்கக் கிருஸ்தவ மத அமைப்பு, அனைத்து சிந்தனைகளின் பேரிலும் தன் கண்காணிப்பைச் செலுத்தி வந்தது என்பதோடு, எந்த மக்களும் சிந்தனை என்ற பெயரில் எதைப் பேசலாம், எதைப் போதிக்கலாம், பிரசுரிக்கலாம் என்பதை எல்லாம் கூடத் தீர்மானித்தது.

கலிலியோ தற்காலம் நாம் விஞ்ஞான முறைகள் என்று நம்பும் பல முறைகளுக்கு அடிகோலிய ஒரு சோதனை விஞ்ஞானி. இவர் பல வகைப் பொருட்களை உருட்டி, வீசி எறிந்து, நகர்த்தி, முதன் முதலாக அவ்வகை இயக்கங்களைத் துல்லியமாக அளவிட்டவர். அதாவது, காலப் போக்கின் ஒரு இயக்கத்திற்கு எத்தனை மணித்துளிகள் ஆகின்றன என்று அளவிட்டவர். சும்மா இருக்காமல், சூரியனை சுற்றி பூமி சுழல்கிறது என்ற கப்பர்னிகஸ் தத்துவத்தை இவர் ஆதரிக்கப் போய், இவரை கத்தோலிக்க சர்ச்சின் மேலாட்சி அமைப்பு மிகவும் இம்சைப் படுத்தி விட்டது. இவரது எழுத்துக்களை வெளியிடத் தடை, வீட்டுக்குள் சிறைவாசம் என்று பலவாறு இவருடைய சுதந்திரம் பறிக்கப்பட்டதோடு, கண்காணிப்பில் இருந்ததால், தன் கருத்துகளைப் பகிர்வதற்கு மிக்க அச்சப்பட்டிருந்தார். உலகைப் படைத்த கடவுளின் சர்வ வல்லமையைச் சந்தேகிக்க எவருக்கும் உரிமை இல்லை என்று நினைத்தது கத்தோலிக்கம்.

விஞ்ஞான முறை என்று கலிலியோ போன்றார் கருதியதோ எல்லாக் கருத்துகளையும் சோதித்துப் பார்த்து நிரூபணமான பின்னரே ஏற்பது என்ற துவக்க கால அறிவியல் முறைமை. அது சர்வ வல்லமையுள்ள இறையின் தீர்மானத்தைச் சந்தேகிப்பதாகத் தோன்றலாம் என்று கருதியது கத்தோலிக்கம் என்பதோடு, இறையின் எண்ணக் கிடக்கை இதுதான் என்று தீர்மானிக்கவும் தமக்கு மட்டுமே உரிமை இருப்பதாகவும் கருதியவர்கள் கத்தோலிக்க சர்ச்சின் மேலாளர்கள். இவர்கள் ஆண்டதோ இத்தலி நாட்டின் மையத்தில் இருந்த ரோம் மாநகரில். இதாலியை ஆண்டவர்கள் ரோமன் கத்தோலிக்க சர்ச்சின் அதிகாரத்தை, கருத்துகளை, தீர்ப்புகளை மீறிச் செல்லும் துணிச்சலோ, விருப்பமோ, பலமோ அற்றவர்கள். ஆக கலிலியோ தன் நிஜமான அறிவியல் கருத்துகளை வெளியிடத் துணிவின்றி வாழ்ந்து வந்ததோடு, தாம் செய்யும் சோதனைகளின் தன்மை பற்றிய கருத்துகள் கூட வெளியில் கசிந்து விடாமல் பாதுகாக்கும் நிலையில் இருந்தார். இப்படி இலை மறை, காய் மறைவாய் இருந்ததுதான் அன்றைய விஞ்ஞானம்.

இங்கிலாந்தில் வாழ்ந்த நியூட்டனின் நிலை மேலானதாக இருந்ததா என்றால், அப்படி ஒன்றும் இல்லை. ஆனால் கலிலியோவை விட அவருக்குச் சற்று மேலான வாய்ப்புகளும், கருத்து வெளியீட்டில் திறப்புகளும் கிட்டின. இருந்த போதும், முழுவதும் வெளிப்படையாக கருத்துப் பரிமாற்றம், மற்றும் அறிவார்ந்த சர்ச்சைகள் எழுந்தமை 19-ஆம் நூற்றாண்டுக்குப் பிறகே என்று சொல்லலாம். இதெல்லாம் நியூட்டனின் காலத்துக்கு வெகு காலம் பின்னரே கிட்டியவை.

நியூட்டன் சிக்கலான வாழ்வு வாழ்ந்தவர். ஒரு புறம், நாடாளுமன்ற உறுப்பினர், மற்றொரு புறம் நாணயசாலையின் தலைவர், வேறொரு புறம், ராயல் சொஸைடியின் தலைவர். பெளதிகத் துறையை புரட்டிப் போட்டவர் என்று எல்லோராலும் இன்று ஒப்புக்கொள்ளப்பட்ட மேதை இவர். ஆனால், இவரது முறைகள் முற்றிலும் திறந்த முறைகள் அல்ல. தலை சிறந்த விஞ்ஞானியாக இருந்த போதும், இவர் தன்னுடைய ஆராய்ச்சியை வெளியிடத் தயங்கியவர். பலரும் வற்புறுத்தியதால் இவர் ‘Principia Mathematica’ என்ற ஆராய்ச்சிப் புத்தகத்தைக் கைப்பட எழுதி வெளியிட்டார். இதை அச்சிட இவர் எந்த முயற்சியும் எடுக்கவில்லை – இத்தனைக்கும், அன்றைய தத்துவ, அறிவியல் கருத்துகள் மேலும் பரிமாற்றங்களுக்கு என்று உருவாக்கப்பட்டதும், அவற்றின் உயர்பீடமாகக் கருதப்பட்டதுமான ராயல் சொஸைடியின் தலைவர் இவர்! மற்றவர்கள் இவருடைய மேதமையை புரிந்து கொள்ளப் பல வருடங்கள் ஆயிற்று ஐன்ஷ்டைனைப் போலவே, எளிதில் புரிந்து கொள்ள முடியாதவர் என்று பெயர் எடுத்தவர் நியூட்டன்.

இவர் கலிலியோ செய்ததைப் போல பல சோதனைகளைச் செய்து (ஒளி, ஈர்ப்புசக்தி, ரசாயனம்), முன்னிலைகளையும், சோதனைக்காளாகும் பொருட்களின் நிலைகளையும், மாறுதல் நிகழும் விதங்களையும், மாறுதலுக்கு அப்புறம் கிட்டும் விளைவுகளையும் துல்லியமாக அளக்க வேண்டும் எனவும் அப்படியே அளக்கவும் தெரிந்த விஞ்ஞானி. இவர் காலத்தில் விஞ்ஞானிகள் எப்படியாவது மற்ற உலோகங்களைத் தங்கமாக மாற்ற ரசாயன முறைகளைத் (Alchemy) தேடி வந்தனர். இவரும், பல சோதனைகளை செய்து, வெளியிடவே இல்லை. நியூட்டனின் வெளியிடாத, தொலைந்து போன ஆராய்ச்சிகள், வெளி வந்த ஆராய்ச்சிகளைவிடப் பல நூறு மடங்கு என்று கணக்கிடப் பட்டுள்ளது. அவர், இறந்த பல ஆண்டுகளுக்குப் பிறகு, வம்சாவளியாக வந்தவர்களிடம், அவரது எழுத்துக்களை சிலர் ஏலத்துக்கு வாங்கி சில எழுத்துக்கள் வெளியிட்டுள்ளனர்.

தன்னுடைய ஆராய்ச்சிகளை வெளியிட்டு, கண்டவர்கள் ஏளனம் செய்வதை இவரால் பொறுக்க முடியவில்லையாம். இதனால், தன்னுடைய ஆராய்ச்சியை வெளியிட வாழ்நாள் முழுவதும் தயங்கியவர் நியூட்டன். முதன் முறையாக, விஞ்ஞானத்தில் கணிதவியலுக்கு முக்கியப் பங்குண்டு என்று உலகிற்கு நிரூபித்தவர் நியூட்டன். இன்று உயர்நிலைப்பள்ளியில் எல்லோரும் படிக்கும் நுண்கணிதம் (calculus) இவரின் முக்கிய பங்கு. அதிலும், லைப்னிஸ் என்ற கணித மேதையுடன் மோதல் – யார் முதலில் நுண்கணிதத்தைக் கண்டுபிடித்தவர் என்று கடைசி வரை முடிவாகவே இல்லை.

நியூட்டன், கோட்பாடு மற்றும் சோதனை அறிவியலின் தந்தை என்று ஒப்புக் கொள்ளப்பட்டாலும், இவரது ரகசிய முறைகள், இன்றைய திறந்த விஞ்ஞான பரிமாற்ற முறைகளுக்கு முற்றிலும் மாறுபட்டவை. எந்தக் கட்டுரை, எப்படி வெளியாக வேண்டும் என்று சட்டதிட்டங்கள் தீட்டும் பணியையும் நியூட்டன் ஆரம்பித்து வைத்தார். அவர் துவக்கிய சில விஞ்ஞானச் சடங்குகள்அன்றிலிருந்து இன்றுவரை, இந்த திறந்த தகவல் உலகத்திலும் தொடர்கின்றன.

நியூட்டன், மாற்று கருத்துள்ளவர்களை துவைத்து எடுப்பதில் மிகவும் ஆரவம் கொண்டவர். பல தருணங்களில், இவர் தனிப்பட்ட தாக்குதல்களையும் விட்டு வைக்கவில்லை. ஹுக் (Robert Hooke) என்னும் சக விஞ்ஞானியுடன் இப்படிப்பட்ட கசப்பான விவாதம் நியூட்டனின் வாழ்க்கையின் ஒரு அம்சம். இன்று விஞ்ஞான கருத்துப் பரிமாறல்கள் தனிப்பட்ட எதிர்ப்புகளைத் தாண்டி நிற்கின்றன, இதற்கு எதிரான நிலையே நியூட்டன் காலத்தில் நிலவியது.

நியூட்டனின் ஆராய்ச்சிக்குச் சந்திரனின் துல்லியமான வான் நிலை (lunar positions) பற்றிய விவரம் (data) தேவைப்பட்டது. அவருடைய நாட்களில் சந்திரனின் துல்லிய நிலை, மாலுமிகளுக்கு மிகவும் தங்களுடைய பயணங்களுக்கு உபயோகப்படும் என்று கருதப்பட்டது. ஆனால், பல ஆராய்ச்சிகளில் ஈடுபட்டிருந்த நியூட்டனுக்கு தகவல் சேகரிக்க நேரமில்லை. ஆனால், தன்னுடைய நாட்டு மாலுமிகளுக்கு உதவ வேண்டும் என்று ஆசைப்பட்டார். சந்திரனின் விண் நிலைகளை ஜான் ஃப்ளாம்ஸ்டீட் (John Flamsteed) என்னும் வானியல் விஞ்ஞானி பொறுமையாகக் கணித்துச் சேகரித்து வந்தார். நியூட்டன் ஜானை சந்தித்து, மாலுமிகளுக்கு உதவச் சந்திர நிலை பற்றிய விவரங்களைக் (data) கேட்டுள்ளார். ஜான் உடனே ஒப்புக் கொள்ளவில்லை. தன்னுடைய உழைப்பு, தனக்கு விருப்பமில்லாத விஷயங்களுக்கு உபயோகிக்கப் படும் என்ற அச்சம் அவருக்கு. மேலும், யாரோ செய்யும் தவறுக்கு, தான் உடந்தையாகி விடுவோமோ என்றும் கவலை அவருக்கு.

வெறுத்துப் போன நியூட்டன், தன்னுடைய பதவியைக் காட்டி மிரட்டவும் முயற்சித்தார். தயங்கிய வண்ணம் ஜான் விவரங்களைக் கொடுத்தாலும், இவர்களுக்குள் பகை வாழ்நாள் முழுவதும் தொடர்ந்தது. ஒரு சோதனை விஞ்ஞானியும், ஒரு கோட்பாடு மேதையும் சேர்ந்து வேலை செய்ய எவ்வளவு தயங்கினார்கள் என்பதை இன்று சிலரே அறிவார்கள். நியூட்டனுக்குத் துல்லிய சோதனை விவரத்தின் மதிப்பு புரிந்தது. ஆனால், அவருக்கும் சில கௌரவப் பிரச்னைகளும் இருந்தன.

இதற்கு நேர் எதிரான விஷயம் ஒன்று, நியூட்டனுக்கு முன் வாழ்ந்த ஜெர்மானிய விஞ்ஞானி யொஹானெஸ் கெப்லரின் (Johannes Kepler) வாழ்வில் நடந்தது. இவர் வானியல் மற்றும் கணக்கியல் நிபுணர். இவர் வாழ்ந்த காலத்தில், டிக்கொ பிராஹி (Tyco Brahe) என்ற ஒரு விஞ்ஞானி உண்டு. இவர் ஒரு தீவுக்குச் சொந்தக்காரர். தன்னுடைய தீவில், நட்சத்திரங்கள் மற்றும் கிரகங்களின் வானத்து நிலையைத் துல்லியமாக அளக்க ஒரு வான் ஆய்வகத்தை (observatory) நிறுவினார். இவருடைய துல்லிய அளவிடல்கள் கெப்லரின் கிரக இயக்க கோட்பாடுகள் உருவாக உதவின.. டிக்கோவிற்கு தன்னுடைய அளவீடுகளைக் கெப்லரிடம் தருவதில் எந்தத் தயக்கமும் இல்லை.

இன்று விஞ்ஞானத்தில் எந்த ஒரு கோட்பாடும் சரியான, துல்லியமான கண்காணிப்பினால் நிறுவப்பட வேண்டும் என்று சர்வ சாதாரணமாக ஒப்புக் கொள்கிறோம். ஆனால், கத்தோலிக்க/ ப்ரொடஸ்டண்ட் பிரிவுகள் போலக் கருத்து வேறுபாடுகளில், நம்பிக்கை வேறுபாடுகளில் தொடங்கிய விஷயமிது என்பதை மறக்கக் கூடாது. விஞ்ஞானிகள் கருத்துப் பரிமாற்றம் செய்ய எளிதாக இருக்க வேண்டும் என்று உருவான ஒரு கருவியே இணையம். மூடு மந்திரத்திலிருந்து இணையம் வரை எப்படி இந்த மாற்றம் பரவியுள்ளது என்று விரிவாக அடுத்த கட்டுரையில் பார்போம்.No comments