Header Ads

test

தண்டனைக்குரியவர்கள் தப்பிக்க விடப்படுகின்றனரா - கோண்டாவிலில் கூட்டு வல்லுறவு - மரண தண்டனை பெற்ற இராணுவ அதிகாரிகள் விடுதலை - தமிழர்களுக்கு சொல்லப்படும் செய்தி என்ன.!!!

மேல் நீதிமன்றத்தில் மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த இரண்டு இராணுவ அதிகாரிகளை, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் குற்றமற்றற்றவர்கள் என விடுதலை செய்து இருக்கின்றார்கள்.

இந்தச் செய்தி சொல்வதென்ன ?

நாட்டில் பாரிய குற்றங்களை இழைத்தவர்கள் இலகுவாகத் தப்பித்துக்கொள்ளும் சம்பவங்கள் சமகாலத்தில் பேசு பொருளாக மாறியுள்ளது.

இச் சம்பவமானது தமிழர்களையே அதிகம் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது எனலாம். எதற்காக தமிழர்கள் மத்தியில் இவ்வாறான அச்ச நிலை ஏற்பட்டுள்ளது என்ற கேள்வி அனைவர் மத்தியிலும் எழும் கேள்வியாக இருக்கலாம்.

இங்குதான் பாரிய சதிவலைப்பின்னல் ஒன்று தமிழர்கள் மத்தியில் கண்ணுக்குப் புலப்படாத வகையில் கையாளப்பட்டுள்ளது.

தமிழ் இளைஞர்கள் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு பல வருடங்களாக அரசியல் கைதிகளாக தடுத்துவைக்கப்பட்டுள்ளனர்.

இதில் பலருக்கு ஆயுள் தண்டனை மற்றும் மரண தண்டனைத் தீர்ப்பு வழங்கப்பட்டு, கைதிகளாக உள்ளதோடு, சிலருக்கு வழக்குகள் இடம்பெறாமலும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

தம்மை விடுவிக்குமாறு அரசியல் கைதிகள் அகிம்சைப் போராட்டங்கள் பலவற்றை முன்னெடுத்தும் எவ்வித பயனும் இல்லாது போக, இது தொடர்பில்  தமிழ் மக்களும் தமிழ் அரசியல் தலைமைகளும் ஜனநாயக ரீதியான பலவகைப் போரட்டங்களை முன்னெடுத்து, எவையும் கைகூடாது போனமை யாவரும் அறிந்ததே.

இதில், சில இடங்களில் தடுத்துவைக்கப்பட்ட அரசியல் கைதிகளின் காலம் முடிவுறும் தறுவாயில் உள்ள சிலரை, பொதுமன்னிப்பின் கீழ், விடுதலை செய்வதாக பூச்சாண்டி காட்டியதை கடந்த காலங்கள் காட்டி நிற்கிறது.

இவ்வாறான செயற்பாடுகள் தமிழர்களை மேலும் மேலும் மன உளைச்சலுக்கு உள்ளாக்கியுள்ளதுடன், அரசின் மீதான வெறுப்பை மேலும் வலுப்படுத்தியுள்ளது.

இதில் ஒரு முக்கிய நபராக கிளிநொச்சியைச் சேர்ந்த ஆனந்தசுதாகரன் இடைப்பட்ட காலத்தில் பேசு பொருளாக மாறியிருந்தார்.

இரண்டு சிறு பிள்ளைகள் உள்ள நிலையில் தயாருடன் கிளிநொச்சிப் பகுதியில் வாழ்ந்து வந்த நிலையில், குறித்த குடும்பத்தின் குடும்பத் தலைவரான ஆனந்தசுதாகரன், பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு, பயங்கரவாத குற்றச்செயலில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டு, பின்னர் மரண தண்டனைத் தீர்ப்பு வழங்கப்பட்டு, ஆயுள்தண்டனை கைதியாக சிறையில் தனது இளமைக் காலத்தை கழித்துவருகிறார்.

இதே காலப்பகுதியில் குறித்த நபரின் மனைவி நோய்வாய்ப்படு இறந்து போன நிலையில், இரு பிள்ளைகளும் நிர்கதியான நிலையில் தமது உறவுகளுடன் வாழ்ந்துவருகின்றனர்.

இரு பிள்ளைகளும் தமது எதிர்காலத்தை கருத்தில்கொண்டு, அன்று ஜனாதிபதியாக இருந்த மைத்திரிபால சிறிசேனவிடம் தமது கருணை மனுவினைச் சமர்ப்பித்து, தமது தந்தையை பொது மன்னிப்பின் கீழ் விடுக்குமாறு விடுத்த கோரிக்கை பொய்த்துப்போனது.

ஆனந்தசுதாகரனின் விடுதலைக்கான கோரிக்கை கடிதத்தில், நாடளாவிய ரீதியில் கையெழுத்து பெறும் செயற்பாடு, பாரிய அளவில் முன்னெடுத்து ஜனாதிபதி அவர்களுக்கு சமர்ப்பிக்கப்பட்டது. 

அத்துடன் இதுபற்றி பாராளுமன்றத்தில் பெருவாரியாகப் பேசப்பட்டதுடன், ஜனநாயக போரட்டங்களும் பாரிய அளவில் முன்னெடுக்கப்பட்டது.

இதில் எவற்றையுமே கருத்திலெடுக்காத அரசு, பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்த பாரிய குற்றங்களை இழைத்து நீதிமன்றங்களால் ஆயுள்தண்டனை, மரணதண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளை தப்பிக்கவிடுவது, நீதித் துறையின் மேல் தமிழர்கள் வைத்துள்ள நம்பிக்கையை கொஞ்சம் கொஞ்சமாக இல்லாதொழித்துவிடுகிறது.

கடந்த காலத்தில் நாட்டின் ஜனாதிபதியாக இருந்த கோட்டாபய ராஜபக்ச அவர்களால், மிருசுவில் கொலை வழக்கோடு சம்மந்தப்பட்ட இராணுவ அதிகாரி ஒருவருக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டது.

இதே போன்று 1996ம் ஆண்டு செப்டம்பர் 30 ம் திகதி 24 வயதான இளம்பெண்ணை இராணுவ சோதனைச் சவாடியில்வைத்து கடத்தி, கொடூர கூட்டுப்பலாத்காரத்திற்குப் பின்னர் படுகொலை செய்து மலக்குழியில் வீசி இருந்தனர்.

அப்போது கடமையில் இருந்த மேஜர் ஜென்ரல் ஜனக பெரேராவின் காலத்தில்தான் இவ்வாறான சம்பவம் இடம்பெற்றது. பாரிய அழுத்தங்களாலும் மனித உரிமைக் குரல்கள் எழுந்ததன் விளைவாகவும் ஆறு இராணுவ அதிகாரிகள் கைசெய்யப்பட்டனர்.

இந் நிலையில் குறித்த இராணுவ அதிகாரிகளுக்கு பாதுகாப்பு இல்லை என்ற காரணத்தினால் யாழிலிருந்து  கொழும்புக்கு வழக்கு இடம் மாற்றப்பட்டது.

2001ம் ஆண்டு சட்டமா அதிபரினால் கொழும்பு மேல் நீதி மன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு, யூரி ஐ உடன்பாட்டு மூலம் மூன்று இராணுவ அதிகாரிகளுக்கு மரணதண்டனை உறுதிப்படுத்தப்பட்டது.

இருந்தும், மேல் நீதிமன்றத்தால் இதில் இரண்டு இராணுவ அதிகாரிகள் குற்றமற்றவர்கள் என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. மற்றைய இராணுவ அதிகாரிக்கு எதிராக மீள் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இவ்வாறான விடயங்கள், தண்டனைக்குரிய குற்றவாளிகள் தப்பிக்க விடப்படுகின்றனரா என்ற கேள்வி அனைவர் மத்தியிலும் எழவே செய்துள்ளது.

எனவே, தமிழர்கள் மத்தியில் விடுதலை செய்ய வேண்டியவர்கள் தடுத்துவைக்கப்பட்டும், தண்டனைக்குட்படடுத்த வேண்டியவர்களை தப்பிக்க விடுவதும், தமிழர்கள் மீதான தொடர் வன்மத்தையே காட்டி நிற்கிறது.

நினைவேந்தல் நாட்களில் தமிழர்கள் விடும் சிறு குற்றங்களைப் பாரிய குற்றங்களாக்கி கைது செய்யப்படுவதும், வழக்குகள் தொடரப்படுதும்,  தமிழ் நீதிபதிகள் மிரட்டப்படுவதும், தமிழர்கள் மீதான அரசின் எதேச்சாதிகாரத்தை காட்டி நிற்கிறது.

ஆக மொத்தத்தில், அனைத்து விடயங்களிலும் தமிழர் தரப்பு மீது, அரசு  தனது அடக்குமுறையை கையாண்டு வருவதை இங்கு காண முடிகின்றது.

நான் உங்கள்,

ஈழத்து எழுத்தாளர் வவுனியூர் ரஜீவன் -




No comments