Header Ads

test

புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலம் மக்களை ஒடுக்குவது பற்றி சிந்தித்தே தயாரிக்கப்பட்டுள்ளது எதிர்காலத்தில் இது கொண்டுவந்தோரையும் ஆதரித்தோரையும் திருப்பித்தாக்கும் - மு.சந்திரகுமார்.

இந்த ஆட்சி மாறிப் புதிய ஆட்சி ஒன்று அமையுமிடத்து, இந்தச் சட்டத்தின் பாரதூரத்தன்மையை இதைக் கொண்டு வந்தோரும் முன்மொழிந்தோரும் கூட அனுபவிக்கநேரலாம். 

ஆகவே நாட்டின் மேம்பாட்டுக்குரிய வழிவகைகளைப் பற்றிச் சிந்திக்கவேண்டுமே தவிர, எந்த நிலையிலும் அதற்கு எதிராக மக்களைக் கட்டுப்படுத்தி ஒடுக்குவதைப் பற்றிச் சிந்திக்கவே கூடாது என சமத்துவக் கட்சி தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் முருகேசு சந்திரகுமார் இது
தொடர்பாக விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது,

அரசாங்கத்தினால் கொண்டு வரப்படவுள்ள புதிய பயங்கரவாதத் தடைச் சட்டம்
நாட்டை மேலும் நெருக்கடிக்குள்ளாக்கும் அபாயகரமான சட்டமாகவே  உள்ளது. இது
நடைமுறைப்படுத்தப்பட்டால் நாட்டுக்கும் மக்களுக்கும் பெரும் பாதிப்பை
நிச்சயமாக உண்டாக்கும்.

மேலும் மக்களின் அடிப்படை உரிமைகளை மறுப்பதுடன், நீதித்துறையையும்
பலவீனப்படுத்தும். அரசியல் நெருக்கடி, பொருளாதார நெருக்கடி
போன்றவற்றிலிருந்து மீள வேண்டிய நிலையில் உள்ள நாட்டை
எதிர்நிலைக்குள்ளாக்கி, ஜனநாயக நெருக்கடிக்குள்ளும் தள்ளிவிடும். இந்தத்
தவறினை அரசாங்கம் செய்யக் கூடாது

“நாட்டிலே தீர்வின்றித் தொடர்ந்து கொண்டிருக்கின்ற இனப்பகை, அதன் விளைவான
அரசியல் நெருக்கடி. நாட்டை ஸ்தம்பித நிலைக்குள்ளாக்கியிருக்கும்
பொருளாதார நெருக்கடி போன்றவற்றிற்குத் தீர்வைக் கண்டு நாட்டை மீட்டெடுக்க
வேண்டியுள்ளது. இதற்கான வழிவகைகளை மிக விரைவில் காண வேண்டும். இதில்
அனைத்துத் தரப்பினருடைய பங்கேற்பும் அவசியமாகும்.

 அதற்கான ஏது நிலைகளையும் சூழலையும் அரசாங்கம் உருவாக்கி இந்தப்
பங்களிப்பைப் பெற வேண்டும். இதைச் செய்வதற்குப் பதிலாக, புதிய புதிய
சட்டங்களால் மக்களையும் மக்களுக்கான செயற்பாட்டியக்கங்களையும்
கட்டுப்படுத்தி அரசாங்கத்திலிருந்து தூர விலக்க முற்படுவது அபாயகரமானது.
மட்டுமல்ல, அது மக்களுடைய உரிமைகளை இல்லாதொழிப்பதுமாகும். இது
நெருக்கடிகளை மேலும் அதிகரிக்கவே செய்யும்.

1979 இல் தற்காலிகமாகக் கொண்டு வரப்பட்டு இன்னும் நிலுவையிலிருக்கும்
பயங்கரவாதத் தடைச் சட்டத்தினால் நாடு சந்தித்த பேரிழப்புகளும்
பின்னடைவுகளும் கொஞ்சமல்ல. அப்படியிருக்கும்போது அதையும் விட மிக மோசமான
புதிய தடைச் சட்டத்தை கொண்டு வந்தால் இரட்டிப்புப் பாதிப்பும்
பின்னடைவுமே நிகழும். உலகிலுள்ள சில நாடுகளில் ஜனநாயகச் செழிப்பைப்
புறக்கணித்து அரைச் சர்வாதிகார ஆட்சிமுறை முன்னெடுக்கப்படுகிறது
என்பதற்காக அதைப்போல இலங்கையும் தன்னை உருவகிக்க முற்படுகிறது. இது
தவறானதாகும்.

வளர்ச்சிப் போக்கானது அரசின் அதிகாரத்தையும் ஆட்சி உரிமையையும் மக்கள்
மயப்படுத்துவதாகவே இருக்க வேண்டும். இந்த அடிப்படையில்தான் ஒரு நாட்டின்
வளர்ச்சியானது அதனுடைய ஜனநாயகச் செழிப்பினால்தான் வளம்பெறுகிறது என
மதிப்பிடப்படுகிறது. அரசும், ஆட்சியும் மக்களுக்கானதே அன்றி, மக்கள் ஒரு
போதும் அரசுக்கும் ஆட்சிக்குமாக இருக்க முடியாது. இப்பொழுது
உருவாக்கப்படும் புதிய பயங்கரவாதச் சட்டமானது, தலைகீழான முறையில்
அரசையும் ஆட்சித் தரப்பையும் பாதுகாக்க முற்படுகின்றதாகவே அமைந்துள்ளது.
இதன் மூலம் மக்களின் வாழும் உரிமைகள் கட்டுப்படுத்துப்படுவதுடன்,
கருத்துச் சுதந்திரம் பறிக்கப்படுவது வரை பகிரங்கமான ஒடுக்குமுறையை
சட்டபூர்வமாக மேற்கொள்வதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது நாட்டின் வளர்ச்சியை மறுதலித்து மக்களிடையே பெரும் கொந்தளிப்பையே
உண்டாக்கும். இத்தகைய யதார்த்த நிலையை உணராத அதிகாரத்துவச் சிந்தனைப்
போக்குக்கு மக்களையும் நாட்டையுமே பலி கொடுக்க வைக்கும்.
வரலாற்றிலிருந்தும் உலக அனுபவங்களிலும் பாடங்களைப் படித்துக் கொள்ளாத –
கணக்கெடுக்காத பொறுப்பற்ற சட்ட விளையாட்டிற்கு மக்களையும் நாட்டையும் பலி
கொடுக்க முடியாது. மேலோட்டமாகப்  பார்க்கும்போது இத்தகைய சட்டமானது
நாட்டிற்கு அவசியமானதைப்போல அதிகாரத்திலிருப்போருக்குத் தோன்றலாம்.
அரசாங்கம் மேற்கொள்ள முற்படுகின்ற நடவடிக்கைகளுக்கான ஏதுநிலைகளை
எட்டுவதற்கு ஒரு முகப்பட்ட சூழலை இது உருவாக்கும் எனத் தெரியும்.
அப்படியாயின் அது சர்வாதிகாரப் போக்கின் அடையாளமாகவே இருக்கும்.

இந்த ஆட்சி மாறிப் புதிய ஆட்சி ஒன்று அமையுமிடத்து, இந்தச் சட்டத்தின்
பாரதூரத்தன்மையை இதைக் கொண்டு வந்தோரும் முன்மொழிந்தோரும் கூட அனுபவிக்க
நேரலாம். ஆகவே நாட்டின் மேம்பாட்டுக்குரிய வழிவகைகளைப் பற்றிச் சிந்திக்க
வேண்டுமே தவிர, எந்த நிலையிலும் அதற்கு எதிராக மக்களைக் கட்டுப்படுத்தி
ஒடுக்குவதைப் பற்றிச் சிந்திக்கவே கூடாது. அது மோசமானது. எனவே இந்தப்
புதிய பயங்கரவாதச் சட்டத்தினை  நாட்டின் மேம்பாட்டிலும் பாதுகாப்பிலும்
கரிசனை கொண்ட அனைவரும் மறுதலித்து எதிர்க்க வேண்டும் என்று
குறிப்பிடப்பட்டுள்ளது.


No comments