Header Ads

test

புத்தகப் பூச்சிகளாக்கப்படும் பாடசாலை மாணவர்கள்.

பாடசாலைகளில் புத்தகக் கல்வி மாத்திரமே போதுமானது என கல்வியலாளர்கள் நினைப்பதன் காரணத்தினாலேயே பல்துறை தகமைகொண்ட மாணவர்களை பாடசாலைகளில் காண்பது அரிதாகியுள்ளது.

இவை இவ்வாறு நீளுமாக இருந்தால் எதிர்காலத்தில் "கிணற்றுத் தவளைகளைப் போன்ற ஏதுமறியாத மாணவ சமூகத்தையே அறுவடை செய்ய நேரிடும்".

பாடசாலை என்பது தனியே ஏட்டுக் கல்வியை நம்பிக்கையாகக் கொண்டதல்ல. ஏனைய விடயங்களையும் கற்றாய்ந்துகொள்ள வேண்டிய கலைக் கூடமாகவே பாடசாலைகள் திகழ்கின்றன.

எது எப்படி இருப்பினும், பெற்றோரும் மாணவர்களும் பாடசாலைச் சமூகத்தினரும் புத்தகம் மாத்திரமே கல்வி என்ற நலிந்துபோன மன ஓட்டத்திலிருந்து மீள முடியாததால் இது தொடர்பில் அலசி ஆராய இதுவரை முற்படவில்லை.

தனியே பரீட்சைகளை மட்டுமே எதிர்பார்த்தபடி அவற்றையே இலக்காகக்கொண்டு அதன் வழியே நகருவதால், மாணவர்களிடம் காணப்படும் தனிப்பட்ட திறமைகள் மழுங்கடிக்கப்படுகின்றன.

இதன் காரணமாக பாதிப்படைவது மாணவர்களே. வழிகாட்ட வேண்டிய ஆசிரியர்கள் இவை தொடர்பில் அலட்டிக்கொள்ளாது தம் இஸ்ரப்படியே தமது காலத்தைக் கழிக்கின்றனர்.

பாடத் திட்டத்தை எப்பேர் பாடுபட்டேனும் முடித்து தமது மேலதிகாரிகளிடம் பாராட்டுக்களைப் பெற்றிட வேண்டுமென்பதோடு மட்டுமல்லாமல் தாம் கற்பிக்கும் மாணவர்கள் அதிக மதிப்பெண்களைப் பெற்று பாராட்டைப் பெற வேண்டுமென்ற எண்ணமே ஆழ வேரூன்றியுள்ளது.

இதே மன நிலைதான் ஒவ்வொரு பதவிநிலைகளிலும் உள்ளவர்களிடத்திலும் உப்பிப் பெருத்துள்ளது.

எது எப்படி இருப்பினும், இங்கு அதிகம் மாணவர்களே பாதிக்கப்படுவதோடு, எத்தனையோ மாணவர்களின் எண்ணங்கள் கனவுகள் குழிதோண்டிப் புதைக்கப்படுகிறது. 

"விளையும் பயிரை முளையிலே தெரியும்" என்பதைப் போல, தம்மிடம் கல்வி கற்கும் பிள்ளைகளை கூர்குறிப்பாகக் கவனித்து அவர்களிடம் ஒழிந்து போயிருக்கும் திறமைகளை வெளியே கொண்டுவர வேண்டிய பொறுப்புக்கள் யாவும் ஆசிரியர்களையே சாரும். எதிர்பார்த்த தமது அடைவு மட்டத்தை அண்மிக்காத போது, அம் மாணவர்கள் அடுத்த தெரிவின்றி பாதை மாறி சமூக விரோத செயல்களில் ஈடுபட ஆசிரியர்களே மூல காரணியாக இருப்பது மனவேதனையைத் தரும் சம்பவமாகும்.

லைத்துறை சார் விடயங்கள், விளையாட்டு, மற்றும் தொழில் தகமைகள் போன்றவற்றை போதிப்பதனால் எதிர்காலத்தில் மாணவர்கள் தமது சொந்தக் காலில் நிற்கக் கூடிய தைரியத்தைப் பெறுவார்கள் என்பதே யதார்த்தமாகும். 

தொழில்முறைக் கல்வியையும் பாட விதானத்தோடு இணைத்து செயற்படுத்துவதால் மட்டுமே 

கல்வி பொது தராதர சாதாரண தரம் மற்றும் கல்வி பொது தராதர உயர்தரப்

பரீட்சைகளில் பின்னடைவைச் சந்திக்கும் மாணவர்கள், பாடசாலைக் காலத்தில் தாம் கற்ற தொழில்முறைக் கல்வியினூடாக சுய தொழில் ஒன்றை ஆரம்பித்து தமது பொருளாதாரத்தைத் தக்க வைத்துக்கொள்ள முடிவதோடு, சமூக மட்டத்தில் எழும் பிரச்சினைகளும் அதிகளவில் குறைக்கப்படும்.

அது மட்டுமன்றி மாணவர்கள் மத்தியில் நாட்டினதும் மற்றும் தனிமனித பொருளாதார மேம்பாடு பற்றிய புரிதல்களையும் ஏற்படுத்துவதால் நாட்டின் எதிர்கால நலனின் முதுகெலும்பாக மாணவர்கள் திகழ்வார்கள்.

ஏதோ ஒரு விடயத்தில் மாணவர்களை சாதனையாளர்களாக மாற்றம்பெற வைக்க வேண்டும் என்ற கோட்பாடு கல்விச் சமூகத்தினரிடம் துளிர்விட வேண்டும். இல்லையேல் வெறுமனவே புத்தகப் பூச்சிகளாகவே பாடசாலையை விட்டு வெளியே வருவார்கள்.  

இதே போன்றுதான் சமூகம் பற்றிய தெழிவுபடுத்தல்களையும் மாணவர்களிடம் அதிகம் விதைக்க வேண்டியுள்ளதோடு தலைமைத்துவ பண்புகளையும் சிறுவயதிலிருந்தே ஊட்டிவிட வேண்டும்.

இவ்வாறான விழிப்புணர்வுகளை மாணவர்கள் மத்தியில் கொண்டு சேர்க்கத் தவறுவதன் விளைவாகவே பல்கலைக்கழகம் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களும் தமக்கு எழும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியாது தற்கொலை என்ற விடயத்தைக் கைக்கொண்டு அதிகளவானவர்கள் உயிரை மாய்த்த சம்பவங்களும் பதிவாகியுள்ளன.

தற்காலத்தில் போதிய விழிப்புணர்வு மாணவர்கள் மத்தியில் இல்லாததன் விளைவாகவே, அதிகமான மாணவர்கள் குற்றச் செயல்களில் ஈடுபட்டு தம் இளமைக் காலத்தை சிறைக் கூடங்களிலேயே கழித்து வருகின்றனர்.

எவ்வளோ எண்ணற்ற ஆசைகளை நெஞ்சில்ப் புதைத்தே ஒவ்வொரு பெற்றோரும் தம் தம்பிள்ளைகளை பாடசாலைச் சமூகத்திடம் ஒப்படைக்கின்றனர். ஆனால் அதற்கு மாறாக, புத்தகம் என்ற மாயைக்குள் தலை புதைத்துள்ள கல்விச் சமூகம் அதன் ஓட்டத்திலேயே மிக வேகமாக ஓடிக்கொண்டிருப்பதால் பெற்றோரின் எண்ணங்களை நிறைவேற்ற முடியாத கையறு நிலைக்குள் தள்ளப்படுகிறார்கள்.

ஆக மொத்தத்தில் பாடசாலைச் சமூகம் தமது கொள்கையில் மாற்றத்தை ஏற்படுத்தி நிறைவான கல்விக் கட்டமைப்பை உருவாக்குவதன் ஊடாகவே எதிர்காலத்தில் பன்முகத் திறன்கொண்ட மாணவ சமூகத்தை உருவாக்க முடியும் என்பதே நிதர்சனம்.

 - ஈழத்து எழுத்தாளர் வவுனியூர் ரஜீவன்


No comments