Header Ads

test

எரிபொருள் நெருக்கடியால் கல்விச் சமூகத்தினர் பெரும் நெருக்கடியைச் சந்தித்துள்ளதாக ஆசிரியர் சேவா சங்கத்தின் வட மாகாண தலைவர் தெரிவிப்பு.

 கல்வி சமூகத்தினர் எரிபொருள் நெருக்கடியால் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளதாக ஆசிரியர் சேவா சங்கத்தின் வட மாகாண தலைவர் ம.ஜெகதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தற்போதைய எரிபொருள் நெருக்கடியில் கல்விச்சமூகம் எதிர்கொண்டுள்ள பிரச்சனைகள் தொடர்பாக வவுனியா ஊடக அமையத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

கல்வி சமூகத்துடன் தொடர்புடைய பலரும் எரிபொருள் நெருக்கடியால் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். மாணவர்கள் தமது கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ள உரிய போக்குவரத்து வசதிகளோ அல்லது தனிப்பட்ட வாகனங்களை பயன்படுத்தக்கூடிய எரிபொருள் வசதிகளோ இல்லாத நிலை காணப்படுகின்றது.

இதனால் அவர்கள் தமது கல்விச்செயற்பாட்டை முன்னெடுப்பதில் பெரும் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது. கடந்த இரண்டு வருடங்காக அவர்களுக்கு கற்றல் செயற்பாடுகள் சீராக இடம்பெறாமையினால், அவர்கள் கணிசமாக தமது கல்வியை இழந்தவர்களாக உள்ளபோது தற்போதுள்ள எரிபொருள் நெருக்கடியானது அவர்கள் மேலும் துன்பப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

அத்துடன் ஆசிரியர்கள் இதற்கும் மேலாக கஸ்டத்தினை அனுபவித்து வருகின்றனர். சரியான திட்டமிடல் இன்மையே இதற்கான காரணமாகும்.

கடந்த சாதாரண தரப்பரீட்சையில் மாணவர்கள் போதியளவு கற்றலுடன் பரீட்சைக்கு முகம்கொடுக்கவில்லை. அத்துடன் தற்போதைய நிலையில் கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படும் நிலை காணப்படுகின்றது. 

ஆசிரியர்களுக்கு முறையான பொதுப்போக்குவரத்து வசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை. ஆகவே இதற்கு சரியான உபாயங்களை அரசாங்கம் மேற்கொண்டு முறையான கல்வி நடவடிக்கைகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.


No comments