Header Ads

test

பாடசாலை மாணவி ஒருவரை வன்புணர்வுசெய்த ஆசிரியர்.

குளியாப்பிட்டிய பன்னல பொலிஸ் பிரிவில் உள்ள பாடசாலை ஒன்றில் 10 ஆம் ஆண்டில் கல்வி கற்று வரும் 15 வயதான சிறுமியை வன்புணர்வுக்கு உட்படுத்திய பகுதி நேர வகுப்புகளை நடத்தும் ஆசிரியரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் குளியாப்பிட்டிய நீதவான் நீதிமன்றத்தில் நேற்று முன்னிலைப்படுத்தப்பட்டு எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். தங்கொட்டுவை, வென்னப்புவை, மாகந்துர உட்பட பல பிரதேசங்களில் விஞ்ஞான பாடத்தை கற்பிக்கும் 24 வயதான பகுதி நேர வகுப்பு ஆசிரியரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

பாடசாலை மாணவியிடம் கருத்தடை மாத்திரைகள் இருந்தமை, பாடசாலைக்கு செல்லாது வெளி இடங்களுக்கு சென்ற சம வயதான இரண்டு மாணவிகள் தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து அந்த மாணவிகளை சட்ட வைத்திய அதிகாரியின் முன் நிறுத்தி விசாரித்த போது, அவர்களில் ஒரு மாணவியை பகுதி நேர வகுப்பு ஆசிரியர் வன்புணர்வுக்கு உட்படுத்திய தகவல் தெரியவந்ததாக பன்னல பொலிஸ் நிலையத்தின் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தின் பொறுப்பதிகாரி சாவித்ரி சிறிமான்ன நீதிமன்றத்தில் கூறியுள்ளார்.

மேலும் சந்தேக நபர் வட்சப் செயலி மூலம் மாணவியை தூண்டுதல் செய்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. அதேவேளை சந்தேக நபருக்கும் சிறுமிக்கும் இடையில் காதல் தொடர்பு இருப்பதாகவும் இதனால், அவருக்கு பிணை வழங்குமாறு சந்தேக நபர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதன் போது கேள்வியை முன்வைத்து பேசிய நீதவான் ரன்திக லக்மால் ஜயலத், நீதிமன்றத்திற்கு வரும் வன்புணர்வு வழக்குகள் அனைத்தும் காதல் தொடர்பால் நடக்கும் சம்பவங்களாக இருப்பது அதிர்ச்சிக்குரியது என கூறியுள்ளார்.

முதல் ஏற்படும் காதல் மறுநாள் வன்புணர்வாக மாறுவது ஆச்சரியமானது எனவும் நீதவான் தெரிவித்துள்ளார். இதனையடுத்து பன்னல பிரதேச பாடசாலையில் பயிலும் மாணவியிடம் விசாரணை நடத்தி எதிர்வரும் 15 ஆம் திகதி அறிக்கை தாக்கல் செய்யுமாறு நீதவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.

இதனிடையே சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் வன்புணர்வு சம்பந்தமாக நியாயமான சந்தேகங்கள் அல்லது தகவல்கள் இருக்குமாயின் அது குறித்து உடனடியாக 1929 என்ற இலக்கத்துடன் தொடர்புக்கொண்டு தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபைக்கு அறிவிக்க வேண்டியது பொறுப்பான பிரஜைகளின் கடமை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


No comments