Header Ads

test

இனப்பிரச்சினை தீர்வு பேச்சுக்கான ஜனாதிபதியின் அழைப்பை சமத்துவக் கட்சி வரவேற்கிறது - முன்னாள் எம்பி சந்திரகுமார் ஜனாதிபதிக்கு கடிதம்.

இனப்பிரச்சினைக்குத் தீர்வு காண வேண்டும் என்ற நோக்கில் தமிழ் பேசும்தரப்பினருடன் பேச்சுகளை ஆரம்பிப்பதற்கு ஜனாதிபதி எடுத்திருக்கும் நடவடிக்கைகளை, தமிழ் மக்களை பிரதிநிதித்துவம் செய்யும் கட்சியென்ற வகையில் நாங்கள்  வரவேற்கிறோம் என சமத்துவக் கட்சியின் பொதுச் செயலாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான மு. சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தி்ல் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

நாடு தற்போது எதிர்நோக்கியுள்ள சிக்கல்களில் இருந்து விடுபடுவதற்கு பொருளாதார மீடடெடுப்புடன், தமிழர்களில் அரசியல் பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வொன்றினை காண்பதும் முக்கியாமானதாகும்.  

இது  தங்களைப்போன்ற துணிச்சலும் அர்ப்பணிப்பும்  உறுதிப்பாடும்  உள்ள தலைமைகளால் மட்டுமே இயலும் என்ற அரசியல் பட்டறிவின் அடிப்படையில், உங்களுடைய முன்னெடுப்புகள், தீவில் வாழக்கூடிய அனைத்து இன மக்களும், சர்வதேச கோட்பாடுகளின்வழி உரித்துடைய சுதந்திரங்களையும் உரிமைகளையும் அனுபவிப்பதற்கு வழிபிறக்கும் என்ற நம்பிக்கையை விதைத்திருக்கின்றன.

யுத்தம் முடிந்து 14 ஆண்டுகளாகிறது. இந்தக் காலத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயமான நிவாரணங்கள் அளிக்கப்பட்டிருக்க வேண்டும். அரசியற் கைதிகளின் விடுதலை, காணாமலாக்கப்பட்டோரின் பிரச்சினைக்குத் தீர்வு,உயிரிழப்புகளைச் சந்தித்த குடும்பங்களுக்கான இழப்பீடு, உடல் உறுப்புகளை இழந்தவர்களுக்கான வாழ்க்கைப்படி தொடக்கம் மீள்குடியேற்றம்,மீள்நிலைப்படுத்தல், பொருளாதார இழப்பு, நில இழப்பு, தொழில் இழப்புவரை அனைத்துக்கும் முறைப்படியான தீர்வுகள் காணப்பட்டிருக்க வேண்டும். 

எனினும் இது தொடர்பில் முன்னைய தலைமைகள் எடுத்திருந்த நடவடிக்கைகள் வெற்றிகரமானதாக அமையவில்லை. ஒருபுறம் பாதுகாப்பு தொடர்பான செலவீடுகள் தொடர்ந்து அதிகரிக்க, மறுபுறத்தில் அந்நியசக்திகளின் வேண்டத்தகாத அரசியல் தலையீடுகளால், எதிர்மறையான விளைவுகளை நாடு சந்திக்கவேண்டி நேர்ந்துள்ளது. இனங்களுக்கிடையில் அவநம்பிக்கை நீடித்ததோடு, அனைவரும் வேண்டிநிற்கும் நிலைத்ததும் - நீடித்ததுமான அபிவிருத்தியை, யுத்தம் நிறைவுற்று தசாப்தம் கடந்தும்  இலங்கையால் அடையமுடியவில்லை.

இலங்கை  பல்லின மக்களைக் கொண்ட ஒரு நாடு என்ற வகையில், ஒவ்வொரு இனக்குழுவும் கொண்டிருக்கும் அடையாளங்களையும் சிறப்புரிமைகளையும் ஏனையவர்கள் மதித்து அங்கீகரிக்கும் போதுதான் நீடித்த அமைதிக்கான வாய்ப்புகள் உருவகின்றன. மேற்படி அங்கீகாரத்தை பெற்றுக்கொள்வதற்கான பொருத்தமான வழிமுறைகளை தங்களால் விடுக்கப்பட்டிருக்கும் பேச்சுவார்த்தைக்கான அழைப்பு ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில், சமத்துவ கட்சி தங்களது முயற்சிகளுக்கு ஆதரவு தெரிவிப்பதோடு, ஏற்புடைய அனைத்து வழிகளிலும் இணைந்து பங்காற்றும் என்பதையும்  தெரிவித்து கொள்கிறேன் என அக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.


No comments