Header Ads

test

வடக்கு மாகாணத்தில் பாடசாலை மாணவர்களின் இடைவிலகல் சடுதியாக அதிகரிப்பு - வெளிவந்த அதிர்ச்சித் தகவல்.

கோவிட் பெருந்தொற்றுக் காலத்தின் பின்னர் வடக்கு மாகாணத்தில் பாடசாலைகளிலிருந்து இடைவிலகும் மாணவர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளது.

2020ஆம் ஆண்டு 485ஆகவும், 2021ஆம் ஆண்டு ஆயிரத்து 105 ஆகவும், இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் வரையில் 519 ஆகவும் இடைவிலகிய மாணவர்கள் எண்ணிக்கை உள்ளது என வடக்கு மாகாண கல்வித் திணைக்களம் வழங்கிய தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் ஊடாக வடக்கு மாகாண கல்வித் திணைக்களத்திடம் கோரிய தகவல்களில் இவ்விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

மேலும் இது தொடர்பில் தெரியவருவது,

2020ஆம் ஆண்டு வடக்கு மாகாணத்தில் ஆகக்கூடுதலாக மடுக்கல்வி வலயத்தில் 94 பாடசாலை மாணவர்கள்  பாடசாலையிலிருந்து இடைவிலகியுள்ளனர்.

மன்னார் கல்வி வலயத்தில் 72 பேரும், கிளிநொச்சி தெற்கு கல்வி வலயத்தில் 52 பேரும், கிளிநொச்சி வடக்கு கல்வி வலயத்தில் 51 பேரும், முல்லைத்தீவு கல்வி வலயத்தில் 48 பேரும் இடைவிலகியுள்ளனர்.

அதிகளவில் ஆண்களே இடைவிலகியுள்ளதுடன் 10ஆம் மற்றும் 11ஆம் தரங்களைச் சேர்ந்தவர்களே இதில் அதிகமாக உள்ளடங்கியுள்ளனர்.

2021ஆம் ஆண்டு வடக்கு மாகாணத்தில் ஆகக் கூடுதலாக கிளிநொச்சி தெற்கு கல்வி வலயத்தில் 181 பேர் பாடசாலையிலிருந்து இடைவிலகியுள்ளனர்.

வலிகாமம் கல்வி வலயத்திலிருந்து 148 பேரும், மன்னார் கல்வி வலயத்திலிருந்து 135 பேரும், கிளிநொச்சி வடக்கு கல்வி வலயத்திலிருந்து 119பேரும் இடைவிலகியுள்ளனர்.

இந்த ஆண்டின் ஏப்ரல் மாதம் வரையில் வடக்கு மாகாணத்தில் ஆகக் கூடுதலாக வலிகாமம் கல்வி வலயத்தில் 123 பேர் பாடசாலையிலிருந்து இடைவிலகியுள்ளனர்.

வவுனியா வடக்கு கல்வி வலயத்தில் 110பேரும், மன்னார் கல்வி வலயத்தில் 101பேரும் இடைவிலகியுள்ளனர்.

கோவிட் பெருந்தொற்றின் பின்னரான அதிகரித்த இடைவிலகல்களுக்கான காரணம் தொடர்பில் வடக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் செ.உதயகுமாரிடம் வினவியபோது,

வறுமையும் இதற்குப் பிரதான காரணம். அதனை விட கோவிட் காலத்தில் பாடசாலைகளுடன் தொடர்பில்லாது நீண்ட காலம் இருந்தமையால் மாணவர்கள் தொழில்களை நாடிச் சென்ற சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன. சில பெற்றோர் தமது பெண் பிள்ளைகளுக்கு திருமணமும் செய்து வைத்துள்ளனர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.


No comments