Header Ads

test

மன்னார் மனித புதைகுழி தொடர்பில் வெளிவந்த தகவல்.

 அனுராதபுரம் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட மன்னார் - திருக்கேதீஸ்வரம் மனித புதை குழியில் அகழ்வு செய்யப்பட்ட மனித எச்சங்கள் அனைத்தையும் மன்னார் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தி நீதவான் முன்னிலையிலே பிரித்தெடுக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கட்டளை ஆக்கப்பட்டுள்ளது என காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணி வி.எஸ்.நிறைஞ்சன் தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

மன்னார் திருக்கேதீஸ்வரம் மனித புதைகுழி தொடர்பான வழக்கு விசாரணை நேற்றைய தினம் (24) புதன்கிழமை மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

ஏற்கனவே அகழ்ந்து எடுக்கப்பட்ட மனித எச்சங்கள் அனுராதபுரம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ள நிலையில், மன்னார் நீதவான் நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட கட்டளைக்கு அமைவாக அமெரிக்காவில் உள்ள புளோரிடா நிறுவனத்தில் 'சி-14 காபன்' பரிசோதனைக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகளை வழக்கு தொடுநர் சார்பாக எடுத்திருந்தனர்.

இந்நிலையில் கடந்த தவணை அனுராதபுரம் வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த மனித எச்சங்களை பிரித்தெடுத்து பகுப்பாய்வுக்கு அனுப்புவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வழக்கு தொடுநர்கள் கோரிக்கையொன்றை முன்வைத்திருந்தனர்.

இதற்கமைய, அனுராதபுரம் நீதவான் முன்னிலையில் அவ்வாறான பிரிப்பு நடவடிக்கையை மேற்கொள்வதற்கு அல்லது மன்னார் நீதவான் அதற்கு உறுதுணை புரிந்து அவரின் மேற்பார்வையின் கீழ் குறித்த நடவடிக்கையை மேற்கொள்வதற்கு கட்டளையொன்றை வழங்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

அதற்கான கட்டளை இன்று புதன்கிழமை(24) மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் வாசிக்கப்பட்டது.

ஏற்கனவே கொண்டு செல்லப்பட்ட மனித எச்சங்கள் அனைத்தையும் மன்னார் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தி ,மன்னார் நீதவான் முன்னிலையில் பிரித்தெடுக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற கட்டளை ஆக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கானது எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21ஆம் திகதி (21-09-2022) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளது.வழக்கு தொடுநர் இவ்விடயம் தொடர்பான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் கட்டளை ஆக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.




No comments