Header Ads

test

மீண்டும் மூடப்படும் பாடசாலைகள் - கல்வி அமைச்சு தெரிவிப்பு.

 கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பிரதான நகரங்களில் உள்ள பாடசாலைகள் அனைத்திற்கும் அடுத்த வாரமும் விடுமுறை வழங்கப்படுகின்றது. 

ஏனைய கிராமப்புற பாடசாலைகள், செவ்வாய், புதன், வியாழன் ஆகிய நாட்களில் செயற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

மாகாண கல்வி அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

எரிபொருள் பிரச்சினை காரணமாக, நாடுமுழுவதுமுள்ள அனைத்து பிரதான நகரங்களிலும் உள்ள பாடசாலைகள் இந்த வாரம் இயங்கவில்லை. எனினும், இணையவழி கற்பித்தலை முன்னெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

ஏனைய பகுதிகளில் உள்ள பாடசாலைகள் தொடர்பில் பொருத்தமான தீர்மானங்களை மேற்கொள்வதற்கு மேல் மாகாணம் உட்பட சகல மாகாணங்களிலும் உள்ள கல்வி அதிகாரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

அத்துடன், மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் ஆகியோரின் போக்குவரத்துக்கு சிரமங்கள் ஏற்படாத வகையில் பிரதேச மட்டத்தில் குறைந்த மாணவர் எண்ணிக்கையை கொண்ட பாடசாலைகளை நடத்துவதற்கு மாகாண கல்வி அதிகாரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது.

சில பாடசாலைகளுக்கு சமூகமளிக்க முடியாத மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் எண்ணிக்கையை கருத்திற்கொண்டு, வலய கல்விப் பணிப்பாளருடன் கலந்துரையாடி பொருத்தமான தீர்மானத்தை மேற்கொள்ள குறித்த பாடசாலை அதிபர்களுக்கு கல்வி அமைச்சு அதிகாரம் வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.





No comments