Header Ads

test

நாட்டின் அபிவிருத்தியில் முக்கிய பங்கை வகிக்கும் சமுர்த்தி பயனாளிகள்.

எமது நாட்டினுடைய அபிவிருத்தி ரீதியில் அல்லது பொருளாதார ரீதியில் முன்னேற்றமடையாமைக்கான காரணங்களை ஆராய்கின்ற போது,கிராம மட்டத்திலிருந்தே ஆராய வேண்டிய தேவை உள்ளது.

அதாவது,அரசினால் நடைமுறைப்படுத்தும் திட்டங்களை எவ்வாறு அரச திணைக்களங்கள் நடைமுறைப்படுத்துகின்றன என்பதே தற்போதுள்ள கேள்விக்குறியாக உள்ளது.

ஒரு கிராம சேவகர் பிரிவை எடுகோளாக எடுக்கின்ற சந்தர்ப்பத்தில் அக் கிராமத்தின் முழுமையான பொறுப்புக்களும் குறித்த கிராம சேவகரின் கையிலேயே தங்கியுள்ளது.

ஆனால் அக் கிராமத்தில் ஏனைய துறைசார் உத்தியோகத்தர்களும் கடமை புரிவதை காண முடிகின்றது.உதாரணமாக சொல்வதென்றால் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள்,சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என காணப்படுகின்றனர்.

இவை இவ்வாறு இருக்கையில்,ஒரு கிராம அலுவலர் பிரிவில் நடைமுறையில் உள்ள திட்டம் ஒன்றை மேற்கோள் காட்டி ஆராய்கின்ற போது, அவற்றின் நன்மை தீமை என பலதரப்பட்ட விடயங்களை உற்றுநோக்க வேண்டிய தேவை உள்ளது.

சமுர்த்தி என்ற திட்டம் நீண்ட காலமாக நாட்டில் நடைமுறையில் உள்ளது யாவரும் அறிந்ததே.

இத் திட்டமானது பொருளாதார ரீதியில் நலிவுற்றுள்ள குடும்பங்களை இனங்கண்டு அவர்களுக்கான திட்டங்களை செயற்படுத்துவதே இத் திட்டத்தின் பிரதான நோக்கமாகும்.

அதாவது இத் திட்டத்தின் ஊடாக இனங்காணப்பட்ட சமுர்த்திப் பயனாளி தொடர்ச்சியாக சமுர்த்தி கொடுப்பனவை பெற்றுக்கொள்ளுபவர்களாக மாத்திரமே காணப்படுகிறார்களே தவிர,அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தி தொடர்ச்சியாக மாதாந்த வருமானத்தை பெறக்கூடிய அல்லது ஈட்டக்கூடிய வகையில் வழிப்படுத்தவில்லை என்பதே உண்மை.

காலாதி காலமாக அவர்களை கையேந்தும் நிலைக்குள்தான் தள்ளி விடப்படுகிறார்களே தவிர அதிலிருந்து விடுபட்டு தமது தேவைகளை தாமே பூர்த்தி செய்துகொள்ளும் நிலையை உருவாக்கவில்லை என்பதே நிதர்சனம்.

ஒரு சமுர்த்தி  பயனாளி கூலி வேலைக்கு செல்பவராக இருக்கின்ற போது, அவருக்கு வழங்கப்படும் சம்பளத்தில் ஒரு பகுதியை போதைப் பொருள் பாவனைக்காக செலவிடுகின்றார் என்றால் அவரின் குடும்ப நிலை அடுத்த கட்டம் என்ன என்ற பெரும் கேள்வியே எழுகின்றது. 

ஆனால் அதே பயனாளி சமுர்த்தி கொடுப்பனவை பெற தகுதியானவர் என அடையாளம் காணப்பட்டுள்ளமையும் வருந்ததக்க ஒன்றே.

அதே வேளை அக் குடும்பம் தமது சுய தேவைக்காக வீட்டில் மரக்கறி பயிர்களை நாட்ட தவறியுள்ளதும் கவலைக்குரியதொன்றாகும்.

இப்போது கூர்ந்து கவனித்துப் பார்த்தால் ஒரு குடும்பத்தின் வறுமை திட்டமிடப்படாத காரணத்தினாலேயே வறுமை நிலைக்குள் தள்ளப்படுகின்றது.

தினசரி கூலி வேலைக்கு செல்ல முடிகின்ற சமுர்த்தி பயனாளிகளை தவிர ஏனைய நிலையில் உள்ளவர்கள், தமது தேவைக்காக ஒரு கோழி வளர்ப்பையோ அல்லது ஒரு சிறிய அளவிலான வீட்டுத் தோட்டத்தையோ செய்கை பண்ணுகின்றபோது தமது தேவைகளை தம்மூடாகவே நிறைவு செய்துகொள்ள முடிகின்றது.

அத்தோடு இவ்வாறானவர்களுக்கு திட்டங்களை நடைமுறைப்படுத்துகின்ற வேளையில் அதற்கான ஆலோசனைகளை குறித்த உத்தியோகத்தர்கள் வழங்க வேண்டியதும் அவசியமாகும்.

வெறுமனே தமது கடமை முடிந்தால் சரி என செயற்படுகின்ற போது அக் குடும்பங்கள் தொடர்ந்தும் சமுர்த்தி பயனாளியாகவே இருக்க நேரிடுகின்றது.

ஒரு திட்டத்தின் வெற்றி என்பது அத்திட்டத்தின் நோக்கத்தை வெற்றிகொள்வதே.எனவே அவ்வாறான குடும்பங்களை வறுமை நிலையிலிருந்து விடுவித்து அடுத்த கட்ட முன்னேற்ற நிலைக்கு கொண்டு செல்ல வேண்டிய முழுமையான பொறுப்பும் சம்மந்தப்பட்ட திணைக்கள தலைவரினதும் உத்தியோகத்தர்களினதும் பொறுப்பாகும்.

வெறுமனே சமுர்த்தி கூப்பன்களை வழங்குவதோ அல்லது கடன்களை வழங்குவதோ விடயமல்ல.அவர்களுக்கு ஏதோ ஒரு திட்டத்தை வரையறை செய்து வழங்கப்படும் கடன் திட்டங்கள் நடைமுறையில் உள்ளதா என்பதை கவனிக்க வேண்டியவர்கள் தவறுவதன் காரணத்தாலேயே தொடர்ந்தும் அவர்கள் சமுர்த்தி பயனாளியாக இருக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்குள் தள்ளப்படுகின்றார்கள்.

தமது கிராம அலுவலர் பிரிவில் நடைமுறையில் உள்ள திட்டங்கள் எவ்வாறான நிலையில் உள்ளது என்பதை கண்காணிக்க கிராம சேவகர்கள் தவறுவதும் இவ்வாறான கையறு நிலைக்கு காரணமாகிறது.

ஒரு சமுர்த்தி பயானியை வாழ்வாதார ரீதியில் முன்னேறி அதிலிருந்து விடுவித்தோம் என்று கூறுமளவிற்கு எமது நாட்டில் எந்த கிராம சேவகர் பிரிவும் இல்லை என்பதே வருத்தமளிக்கின்றது.

நாட்டினுடைய அபிவிருத்தி என்பது கிராம மட்டத்திலிருந்தே ஆரம்பிக்க வேண்டிய தேவை உள்ளது போது,கிராம மட்டங்களில் எவ்வாறான உற்பத்தி செயற்பாடுகளும் இல்லாது வெறுமனே இருண்டு போயிருப்பது நாட்டின் எதிர்கால அபிவிருத்தியை கேள்விக்குறியாக்கிவிடும் என்பதே காலம் தந்த பாடமாகும்.

நாட்டில் காணப்படும் சமுர்த்தி திட்டம் முறையான வகையில் கையாண்டால் பெருமளவான வறுமை நிலையை இல்லாது ஒழித்து நாட்டை ஒளிமயமான சூழலுக்குள் கொண்டு செல்ல முடியும் என்பதே நிதர்சனம்.இல்லை என்றால் நாட்டின் அபிவிருத்தியை இருட்டறைக்குள் கறுப்பு பூனையை தேடியதைப் போலாகிவிடும்.

இன்னுமொரு சோமாலியாவை நோக்கிய பயணத்தை ஆரம்பித்துள்ள இலங்கையின் பொருளாதாரம் கிராம மட்டத்திலிருந்து உயிர்பெற வேண்டிய தேவை தற்போது ஏற்பட்டுள்ளது.

பொருளாதார அபிவிருத்தி என்ற சிந்தனை இல்லாதவர்கள் நாட்டின் தலைவர்களாகுகின்ற போது நாடு கடன்படு நிலைக்குள்ளும் கையேந்தும் நிலைக்குள்ளுமே தள்ளப்படும்.

வெறுமனே ஆட்சிக்கு வருபவர்கள் தன்னாதிக்க சிந்தனையையும் பேரினவாத கொள்கைகளையும் விடுவிப்பதோடு தமது அடுத்த கட்ட அரசியல் காய் நகர்த்தல்களையும் கட்சிசார் வளர்ச்சியையும் சிந்திப்பதை நிறுத்தி, அடக்குமுறைகளையும் கைவிட்டு, நாட்டின் அபிவிருத்தி என்ற சிந்தனைக்குள் என்று நிலைபெறுகின்றார்களோ அன்றே நாட்டின் அபிவிருத்தி சாத்தியமாகும்.

       - வவுனியூர் ரஜீவன் 



No comments