Header Ads

test

மே தினத்தை துக்க நாளாக பிரகடனப்படுத்தும் தமிழர் ஆசிரியர் சங்கம்.

 ஒவ்வொரு அதிபரும், ஆசிரியரும் மே தினமான இந்நாளை துக்க நாளாக கருதி அவரவர் வீடுகளில் இருந்து பிரார்த்தனை செய்வோம் என இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

உலகத் தொழிலாளர் நாளாம் மே1 உலகில் வாழும் ஒட்டுமொத்த தொழிலாளர்களின் எழுச்சி நாளாகும். இந்நாளில் தொழிலாளர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து எழுச்சியை வெளிப்படுத்தும் நாளே மே தினம்.

இலங்கையில் வாழுகின்ற அத்தனை தொழிலாளர்களும் தற்போது வாழ்வதற்கு வழியின்றி வாழ்க்கைக்காக போராடுகின்றனர். ஆசிரியர்களின் அடிப்படைச் சம்பளமாக இரண்டு லட்சம் தந்தாலும் இன்றைய நிலையில் வாழ முடியாது.

 அது போன்று அத்தனை உழைப்பாளர்களும் அடுத்த வேளை உணவுக்கு அலையும் நிலை இன்று உருவாகியிருக்கின்றது. இந்த நிலைக்கு இலங்கையில் உள்ள அத்தனை அரசியல் கட்சி உறுப்பினர்களும் காரணம் என்பதனை வலியுறுத்தி இளையோர் இன்று வீதியில் இறங்கியுள்ளனர்.

வருடந்தோறும் நாம் நடத்தும் மேதின பேரணியாலோ, கூட்டங்களாலோ எதுவும் நடந்துவிடப் போவதில்லை. இது கடந்தகால வரலாறு.

இந்நாளை அரசியல்வாதிகளே தமக்குச் சாதகமாகப் பயன்படுத்துகின்றனர். இதுவே காலம் காலமாக நடைபெறுகின்றது. இவ்வருடம் வரும் மே நாளை வாழ வழியில்லாத துக்க நாளாக இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் பிரகடனப்படுத்துகின்றது.



No comments