Header Ads

test

அரச ஊழியர்களின் சம்பளம் தொடர்பில் வெளிவந்த அதிர்ச்சித் தகவல்.

 அரசாங்க கூட்டுத்தாபனங்களில் பணியாற்றுவோருக்கு சம்பளம் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், ஊழியர்கள் நெருக்கடி நிலைக்கு முகங்கொடுத்துள்ளனர்.

லேக் ஹவுஸ் மற்றும் ரூபாவாஹினி கூட்டுத்தாபனம் என்பன ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாத நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில் லேக்ஹவுஸ் தலைவர் மற்றும் பணிப்பாளர் சபை, ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கையை மீறி தவறான முறையில் செயற்படுவதாக அதன் ஊழியர்கள் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

அத்துடன் நிறுவனத்தின் தொழிற்சங்க அலுவலங்களை ஊழியர்கள் சுற்றிவளைத்துள்ளதாக தெரியவந்துள்ளது. லேக்ஹவுஸ் ஊழியர்களுக்கு மார்ச் மாத சம்பளத்துடன் புத்தாண்டு போனஸ் வழங்கப்படாமையே இந்த பிரச்சினைக்கு முக்கிய காரணமாகும்.

 லேக் ஹவுஸின் பிரதான தொழிற்சங்கங்களான முற்போக்கு ஊழியர் சங்கம், இலங்கை சுதந்திர தொழிற்சங்கம், தேசிய ஊழியர் சங்கம் மற்றும் லேக்ஹவுஸ் ஊழியர் சங்கம் ஆகியவற்றின் உத்தியோகபூர்வ அலுவலக ஊழியர்கள் வெள்ளிக்கிழமை அலுவலகத்தை முற்றுகையிட்டு தொழிற்சங்கத் தலைவர்களைக் குற்றம் சுமத்தியுள்ளனர்.

லேக்ஹவுஸில் மொத்தம் 1,500 பணியாளர்கள் பணியாற்றுகின்றனர். இந்தக் குழுவில் பெரும்பாலான ஊழியர்கள் 2019ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்சவுக்கு வாக்களித்துள்ளதாக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

லேக்ஹவுஸ் நிர்வாகமானது சுபீட்சத்தின் நோக்கு கொள்கையை மீறி, கடந்த இரண்டு வருடங்களாக எவ்வித திட்டமும் இன்றி லேக் ஹவுஸ் இயங்கி வருவதாகவும் கூறி ஊழியர்கள் குழப்பம் ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டுள்ளனர்.

இதேவேளை தேசிய தொலைக்காட்சியான ரூபவாஹியிலும் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாத நிலையில், அங்கு குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து திறைசேரியிடம் நிதி கோரியுள்ளது.

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை தொடருமாயின் அனைத்து அரசாங்க ஊழியர்களுக்கும் சம்பளம் வழங்குவது என்பது பெரும் சவாலாக மாறும் என எச்சரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments