Header Ads

test

மாற்றுத்திறனாளி ஒருவரின் கால்களை அடித்து முறித்த நபர்கள் பிணையில் விடுதலை.

 இடுப்புக்கு கீழே இயங்காத மாற்றுத்திறனாளி ஒருவர் மீது மேற்கொள்ளப்பட்ட மூர்க்கத்தனமான தாக்குதலில் குறித்த நபரது கால் முறிவடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரிய வருவது,

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் காணி பிணக்கு ஒன்றை காரணம் காட்டி குறித்த  மாற்றுத்திறனாளி மீது மேற்கொள்ளப்பட்ட மூர்க்கத்தனமான தாக்குதலால் அந் நபரின் கால் முறிவடைந்துள்ளது.

 கடந்த 05.03.2022 அன்று முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வித்தியாபுரம் பகுதியில் 15 வருடமாக இடுப்புக்கு கீழ் இயங்காத நிலையில் வசித்துவரும் மாற்றுத்திறனாளியான கிறிஸ்துராசா அவர்களது வீட்டுக்கு வருகை தந்த ஒரு குழுவினர் சக்கர நாற்காலியில் இருந்த குறித்த நபரை தாக்கி காலை அடித்து முறித்துள்ளனர்.

இதேவேளை இதனை தடுக்க முற்பட்ட மனைவி மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதில் மனைவியின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதோடு வீட்டில் இருந்த வயோதிபர் ஒருவர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது

இதன்போது தாக்குதல் நடத்திய மூவரை ஒட்டுசுட்டான் பொலிசார் கைது செய்துள்ள நிலையில் அந் நபர்களை கடந்த 06.03.2022 அன்று முல்லைத்தீவு நீதிமன்றத்தில் முன்னிலை படுத்தியதுடன் அவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



No comments