Header Ads

test

காணாமல் போன நிலையில் தேடப்பட்டு வந்த மாணவன் பொலிஸாரால் மீட்பு.

 காணாமல் போன நிலையில் தேடப்பட்டு வந்த, வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஓட்டமாவடியைச் சேர்ந்த 17 வயதுடைய மன்சூர் அன்ஸப் என்ற மாணவனை கண்டுபிடித்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த 28 ஆம் திகதி வீட்டை விட்டு சென்றிருந்த குறித்த மாணவன், வீடு திரும்பாததால் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் பெற்றோர் முறைப்பாடு செய்திருந்தனர். காணாமல் போன மாணவன் சென்றிருந்த சைக்கிளும் அவர் அணிந்திருந்த சேர்ட் மற்றும் பாதணிகள் போன்றவை பாசிக்குடா - கல்மலை கடலோரத்தில் இருந்து மறுநாள் 29ஆம் திகதி கண்டெடுக்கப்பட்டது.

இதனையடுத்து மாணவனின் பொருட்களை கண்டு கொண்ட பெற்றோரும், பிரதேச மக்களும் மாணவன் நீரில் மூழ்கி மரணமடைந்திருக்கலாம் எனும் சந்தேகத்தில் பொலிஸாரின் உதவியுடன் சுழியோடிகள் மாணவனை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

இந்த நிலையில், மாணவன் வீட்டை விட்டு வெளியேறும் போது சில ஆடைகளையும், அவரிடமிருந்த சிறிதளவு பணத்தையும், தேசிய அடையாள அட்டை மற்றும் கையடக்க தொலைபேசி ஆகியவற்றை எடுத்துச் சென்றுள்ள விடயம் பெற்றோருக்கு தெரியவந்துள்ளது.

தொடர்ந்து மாணவனின் கைத்தொலைபேசி பாவனையில் இருந்ததை அவதானித்த பொலிஸார், மாணவன் தலைமறைவாகி இருக்கலாம் எனும் சந்தேகத்தில் தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனர்.

இதனையடுத்து ஐந்து நாட்களின் பின்னர் நேற்றுமாலை வவுனியா பகுதியில் வைத்து கண்டுபிடித்துள்ளனர். வீட்டில் ஏற்பட்ட முரண்பாடு ஒன்றின் காரணமாகவே தான் வீட்டை விட்டு வெளியாகியதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளின் போது மாணவன் வாக்கு மூலம் வழங்கியுள்ளான்.

பெற்றோரை திசை திருப்பவே கடலோரம் சைக்கிளையும் அணிந்திருந்த சேர்ட்டையும் வைத்து விட்டு யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற பஸ் வண்டியில் வவுனியா சென்றுள்ளதாக விசாரணையின் போது தெரியவந்துள்ளது. தொடர்ந்து மாணவனை பொலிஸார், பெற்றோர்களிடம் ஒப்படைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments