Header Ads

test

யாழில் இவற்றை கட்டுப்படுத்த பாரிய முயற்ச்சி எடுப்பதாக யாழ் மாவட்டச் செயலாளர் தெரிவிப்பு.

 யாழ்ப்பாணம் மாவட்டத்தில் டெங்கு அபாயம் அதிகரித்துள்ள நிலையில், டிசெம்பர் 6ஆம் திகதி முதல் டெங்கு நுளம்பு கட்டுப்பாட்டு வாரம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக யாழ் மாவட்டச் செயலாளர் க.மகேசன் தெரிவித்தார்.

அதோடு டெங்கு , கட்டுப்பாட்டு நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட உள்ளதாக, மாவட்டச் செயலாளர் கூறினார். யாழ்ப்பாண மாவட்டச் செயலகத்தில், நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே  அவர் இதனை தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

யாழ் மாவட்டத்தில் நிலவிய மழையுடனான காலநிலையின் பின்னர், டெங்கு நுளம்பு பரவும் அபாயம் அதிகரித்து காணப்படுகின்றது. கடந்த வருடத்தைவிட, இந்த வருடத்தின் கடந்த வாரம் வரை, டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்த நிலை காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அதன்படி, கடந்த வாரம் வரை 133 பேருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளதென்று அறிக்கையிடப்பட்டு உள்ளதாகவும் கூறினார். டெங்கு நுளம்புகளின் பெருக்கம் அதிகமாக செப்டெம்பர், ஒக்டோபர், நவம்பர், டிசெம்பர் மாதங்களில் காணப்படுவதாகக் கூறிய அவர், அதன் அடிப்படையிலேயே, சுகாதார விழிப்புணர்வு குழுக் கூட்டத்தில் கொரோனா, டெங்கு தொடர்பிலும் ஆராய்ந்ததாகவும் தெரிவித்தார்.

அதற்கிணங்க, டெங்கு நுளம்பைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து இருப்பதாகவும் , டிசெம்பர் 6ஆம் திகதி தொடக்கம் ஒரு வாரத்தை நுளம்பு கட்டுப்பாட்டு வாரமாக பிரகடனப்படுத்தி, அந்த வாரம் குடாநாடு பூராகவும் அனைத்து பங்குதாரர்களுடனும் நுளம்பு கட்டுப்பாட்டு நடவடிக்கையை மேற்கொள்ள இருப்பதாகவும் அவர் கூறினார்.

ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியிலும், டெங்கு நுளம்பு கட்டுப்பாட்டு செயலணி கூட்டத்தை நடத்தி, ஒவ்வொரு பிரதேச செயலகப் பிரிவு ரீதியாகவும் தங்களுடைய பிரதேசத்தில் டெங்கு கட்டுப்பாட்டில் மேற்கொள்ள கூடிய நடவடிக்கையை முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர் அறிவுறுத்தினார்.

மேலும் ஒவ்வொரு பிரதேச செயலர் பிரிவிலும் உள்ள உள்ளுராட்சி மன்றத்தினர், சுகாதார வைத்திய அதிகாரியினர் மற்றும் ஏனைய அதிகாரிகள் ஆகியோருடன் இணைந்து, இந்த டெங்கு ஒழிப்பு வாரத்தை செயற்படுத்துவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் யாழ் மாவட்டச் செயலாளர் க.மகேசன் தெரிவித்தார்.


No comments