Header Ads

test

ஸ்ரீ காமாட்சி அம்பாள் ஆலய வரலாறு.

1989ம் ஆண்டில் ஆரம்பிக்கிறது ஸ்ரீ காமாக்ஷி அம்பாள் ஆலய வரலாறு. ஆலய ஸ்தாபகர் சிவஸ்ரீ ஆறுமுக பாஸ்கரக்குருக்கள் அவர்கள் இலங்கை நாட்டைச் சேர்ந்தவர், அவர் உள்நாட்டுப் போர்ச்சூழல் காரணமாக 1986ம் ஆண்டளவில் நாட்டை விட்டு வெளியேறி ஐரோப்பிய நாடான பிரான்ஸ் செல்லும் நோக்குடன் தமது பயணத்தை தொடர்ந்தார். ஆனால் அன்னை காமாட்சியின் அருளால் அவர் ஜேர்மனி ஹம் மாநகரில் தங்க நேரிட்டது. மிகவும் பக்தி மார்க்கத்தை கடைப்பிடிக்கும் குருக்கள் அவர்கள் ஜேர்மனிய நலன்புரி நிலையத்தில் தங்க வைக்கப்பட்ட காலத்திலும் தமது வழிபாடுகளில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை.

சில காலங்களின் பின் நலன்புரி நிலையத்திலிருந்து வெளியேறிய அவர் வாடகைக்கு ஒரு வீட்டை எடுத்து அதிலே தங்கி வரலானார். அந்த இடத்திலே தன்னுடைய வழிபாட்டு அறையை அம்பாளின் கோயிலாக நினைத்து பூசைகளை செய்து வந்தார் இச் செய்தி அறிந்த பலர் அவ் இடத்தை நோக்கி நகர்ந்தனர் நாளடையில் பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே சென்றது. அதன் பின் 1989ம் ஆண்டளவில் நில அறையில் தமது வழிபாட்டை குருக்கள் அவர்கள் மேற்கொண்டார் பக்தர்கள் அன்னையின் இடம் தேடி முன்பை விட மிக அதிகமாகவே வரத் தொடங்கினர். நில அறையில் அன்னை காமாக்ஷிக்கு சிறு கோயில் போன்ற மாதிரி வடிவத்தை பக்தர்களின் உதவியுடன் உருவாக்கி அதிலே அன்னையை எழுந்தருளச் செய்து தமது பக்தியெனும் சிரத்தையுடன் நாள்தோறும் பூசைகளைச் செய்து வரலானார். அவருக்கு உதவியாக குருக்கள் அவர்களின் சகோதரர் சிவஸ்ரீ. கேதீஸ்வரஐயாவும் அன்றாட பூசைகளில் அன்னை காமாக்ஷிக்கு பணிகள் செய்து வந்ததார்.

சுமார் இரண்டு வருடங்களாக நில அறையில் அம்பாளுக்கு பூசைகளைச் செய்து வந்த குருக்கள் அவர்கள் மனதில் எப்படியும் அன்னையின் ஆலயத்தை நிலத்தில் அமைக்க வேண்டும் என்ற ஆர்வம் ஏற்பட்டது அதன் காரணமாக அம்பாளின் அருளுடன் 1992ம் ஆண்டளவில் ஹம் நகரிலேயே ஒரு மண்டபத்தை வாடகைக்கு எடுத்து அந்த இடத்தில் அன்னைக்கு அலங்காரத்துடன் கூடிய கற்பக்கிரகம் மற்றும் பரிவார தெய்வங்களுக்கான சந்நிதிகளை ஆலய ஆச்சரியார்களின் உதவியுடன் அமைத்து 1992ம் ஆண்டு கும்பாபிஷேகம் செய்து அன்னைக்கு தினமும் இரண்டு நேரப் பூசைகளை குறையாத பக்தியுடன் திறம்படச் செய்து வந்தார்.

எப்படியாவது அன்னை காமாக்ஷி தேவிக்கு திருவிழா செய்ய வேண்டும் என்ற பெருநோக்கோடு பல கஷ்டங்களைக் கடந்து குருக்கள் அவர்களின் அயராத உழைப்பாலும் பக்தர்களின் ஒத்துழைப்புடனும் 1993ம் ஆண்டில் ஹம் நகரில் குடிகொண்ட அண்ட சராசரங்களையும் தன் பார்வையால் படைத்துக் காத்து ரட்சித்துக் கொண்டிருக்கும் அன்னை சிறி காமாட்சி அம்பாளுக்கு முதன் முதலாக வருடாந்த உற்சவத்தை குருக்கள் அவர்கள் ஆரம்பித்து வைத்தார். உற்சவத்திற்காக இந்தியாவிலிருந்து குருமார்கள் வரவழைக்கப்பட்டு உற்சவம் மிகச் சிறப்பாக நடாத்தி வைக்கப்பட்டது உற்சவகாலத்தில் பல பக்தர்கள் கலந்து அன்னையின் அருள் பெற்றுச் சென்றனர்.

1993ம் ஆண்டு முதல் உற்சவத்தின் பின்பாக அன்னைக்கு ரதோற்சவம் செய்ய வேண்டும் என்ற அம்பாளின் பேரருளோடு 1994ம் ஆண்டு உற்சவத்தில் முதன் முதலாக ரதோற்சவம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. ரதோற்சவ விழாவிற்காக இந்தியாவிலிருந்தும் இலங்கையிலிருந்தும் சிவாச்சாரியர்கள் அழைக்கப்பட்டு குருக்கள் அவர்களின் தலைமையில் ரதோற்சவ விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது சுமார் 2000 பக்தர்கள் உற்சவத்தில் பங்குபற்றி அம்பாளின் அருள் கடாட்சத்தை பெற்றனர். அவ்வாறே 1995ம் ஆண்டும் அன்னையின் விழாக் காலங்களில் பங்கு பற்றும் பக்தர்களின் எண்ணிக்கை மென்மேலும் அதிகமாகவே சென்றது.


இதன் காரணமாக இடப் பற்றாக்குறை மற்றும் ஆலயம் அமைந்திருந்த இடம் மிக நெருக்கமான நகர் பகுதியாக இருந்த காரணத்தினாலும் மஹோற்சவ காலங்களில் சில நெருக்கடிகளுக்கு முகங்கொடுக்க வேண்டியிருந்த காரணத்தினாலும் குருக்கள் அவர்களுக்கு எப்படியும் இடத்தை மாற்ற வேண்டும் என்ற எண்ணம் மனதில் உதித்தது ஆனால் எந்த இடத்திற்கு அம்பாளின் ஆலயத்தை மாற்றுவது தன்னால் அது இயலுமா? அதற்குரிய செலவுகள் எவ்வளவாகும்? அந்த நிதியை யாம் எங்கிருந்து பெறுவது என்கின்ற பல கேள்விகளுக்கு மத்தியில் பல நாட்களாக அன்னையை வேண்டிய வண்ணமே இருந்தர்.


ஒரு நாள் குருக்கள் அவர்களின் கனவில் அகிலாண்ட கோடி ப்ரமாண்ட நாயகி அன்னை ஸ்ரீ காமாக்ஷி அம்பாள் தோன்றி ஆலயத்தை அமைப்பதற்கான இடத்தை தெரியப்படுத்தி மறைந்தாள். அடுத்தநாள் அதிகாலையில் விழித்தெழுந்த குருக்கள் அவர்கள் அன்னை காமாக்ஷி கனவில் தெரியப்படுத்திய குறிப்பிட்ட இடத்தை நோக்கி விரைந்தார் அந்த இடம் ஹம் நகரிலிருந்து சுமார் 10கிலோமீற்றர் தொலைவில் அமைந்திருந்த ஹம் நகர்ப்புறமான உன்ரோப் எனப்படும் ஒரு சிறு கிராமம். குருக்கள் அவாகளுக்கு அளவிலாத ஆனந்தம் காரணம் அன்னையே தனக்கென அந்த இடத்தை தெரிவு செய்து தம்மை இங்கே அனுப்பி வைத்திருக்கிறாள் என்பதுடன் அந்த இடம் அமைந்த பகுதி மிகவும் பிரமாண்டமான பெரிய நெரிசல் அற்ற பகுதியாகவும் அமைந்திருந்தது.


 


அதன் பின்பாக ஹம் நகரிலிருந்து குருக்கள் அவர்கள் அன்னையின் ஆலயத்தை ஹம் நகரின் உன்ரோப்பதிக்கு மாற்றினார் 1996ஆம் ஆண்டு உன்ரோப் பகுதியில் அன்னைக்கு சொந்தமாக நிலம் வாங்கி அந்த இடத்தில் சிறிய ஆலயமாக அமைத்து 1997ஆம் ஆண்டில் மஹா கும்பாபிஷேம் நடத்தினார்.


 


உன்ரோப் பகுதியில் அன்னையின் ஆலயத்தில் தினமும் 2வேளைகள் பூசைகள் செய்யப்பட்டது 1998 ஆம் ஆண்டு நடை பெற்ற அம்பாளின் மஹோற்ஷவ விஞ்ஞாபனத்தில் சுமார் 10 000 பக்தர்கள் கலந்து கொண்டு அன்னையின் அருள் பெற்றுச் சென்றனர். குருக்கள் அவர்களின் மனதில் எப்படியும் அன்னைக்கு கோபுரத்துடன் கூடிய ஆலயம் ஒன்றை அமைக்க வேண்டும் என்ற எண்ணம் எப்போதும் இருந்து வந்தது இதன் காரணமாக பக்தர்களின் ஒத்துழைப்புடன் அன்னைக்கு கோபுரத்துடன் கூடிய ஆலயத்தை அமைப்பதற்கு அன்னை திருவருள் கிடைத்தது. 1998ஆம் ஆண்டு அதே இடத்தில் உள்ள பெரிய காணியை பக்தர்களின் உதவியுடனும் வங்கியின் கடனுதவியுடனும் வாங்கி அங்கே ஆலயம் அமைப்பதற்கு உரிய பூமி பூசை தொடங்கப்பட்டது.




 


  




ஹம் நகரில் வசிக்கும் ஹைன்ஷ் ரைய்னர் ஐஸ்கோஸ்ற் எனும் கட்டிட நிபுணரின் கட்டுமாணப் பணியுடன். ஆலய கட்டிட வேலைகள் ஆரம்பித்து வைக்கப்பட்டது. அடுத்ததாக சிற்ப வேலைகளுக்காக இந்தியாவிலிருந்து சிற்ப கலைஞர்கள் 1999ஆம் ஆண்டு கடைசிப்பகுதியில் இங்கு வரவழைக்கப்பட்டு சிற்பவேலைகள் ஆரம்பிக்கப்பட்டது. அத்துடன் ஆலய விக்கிரகங்கள் அனைத்தும் இந்தியாவில் செதுக்கப்பட்டு வரவழைக்கப்பட்டது. பார்ப்பவர்களின் மனதைக் கொள்ளை கொள்ளும் வகையில் சிலைகள் யாவும் கருங்கற்களில் மிகவும் அழகாகவும் நேர்த்தியாகவும் வடிவமைக்கப்பட்டிருந்தது. மூல விக்கிரகம் (காமாக்ஷி அம்பாள்) இந்தியா காஞ்சி காமாக்ஷி அம்பாளின் திருவுருவத்தை ஒத்ததாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது.


 


சுமார் 18 மாதங்கள் தொடர் வேலைகளின் பின்பாக 2002ஆம் ஆண்டு 7ம் மாதம் 7ம் திகதி ஸ்ரீ காமாக்ஷி அம்பாளுக்கு மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்திறகாக பல சிவாச்சாரியர்கள் இந்தியாவிலும் இலங்கையிலிருந்தும் வருகை தந்து அன்னையின் புதிய ஆலய கும்பாபிஷேகம் சிறப்புற சிவஸ்ரீ. ஆறுமுக பாஸ்கரக்குருக்களின் தலைமையில் நடாத்தி வைக்கப்பட்டது.


கும்பாபிஷேகத்தின் பின்பாக அன்னை ஸ்ரீ காமாக்ஷி அம்பாளுக்கு தினமும் மூன்று காலப் பூசைகள் நடைபெற்று வருகிறது.


No comments