Header Ads

test

இராகலையில் தமிழ் இளைஞன் மீது மூர்க்கத்தனமான தாக்குதல் .

நுவரெலியா – இராகலை – டெல்மார் பிரதேசத்தில் உரத்தை பதுக்கி வைத்த விடயத்தை வெளிப்படுத்தியதாக தெரிவித்து இளைஞர் ஒருவர் மீது குழு ஒன்றினால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் இளைஞன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தாக்குதலுக்கு உள்ளான 24 வயதுடைய பரமசிவன் இராமசந்திரன் என்ற இளைஞர் டெல்மார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். இலங்கை அரசாங்கம் உர இறக்குமதியை நிறுத்தியுள்ள நிலையில், இராசாயன உரத்திற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் விவசாயிகள் பாதிப்பினை எதிர்நோக்கியுள்ளனர்.

இதனையடுத்து சில இடங்களில் கூடுதல் விலைக்கு உரம் விற்பனை செய்வதோடு, சில வியாபாரிகள் உரத்தை பதுக்கும் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் இராகலை – டெல்மார் மேற்பிரிவைச் சேர்ந்த உதயா எனும் நபர், இராகலை நகரில் உரம் மற்றும் கிரிமிநாசினிகளை விற்பனை செய்யும் வியாபாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள உரத் தட்டுப்பாட்டை தமக்கு சாதகமாக பயன்படுத்திக்கொண்டுள்ள குறித்த நபர், தன்னிடம் இருக்கும் உரத்தை பதுக்கியுள்ளதோடு, கூடுதல் விலைக்கு, சிலருக்கு மாத்திரம் அதனை விற்பனை செய்துள்ளதாகவும் பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர். அதன்படி உர மூடை ஒன்றின் விலை 1,500 முதல் 2,000 வரையில் காணப்படுகின்ற நிலையில், குறித்த நபர் 5,000 ரூபாய் முதல் 8,000 ரூபாய் வரையில், விற்பனை செய்துள்ளார்.

இது தொடர்பில் அறிந்துகொண்ட பிரதேச விவசாயிகள் குறித்த வியாபாரியின் வீட்டிற்கு முன்னால் சென்று எதிர்ப்பினை வெளியிட்ட நிலையில், நேற்றைய தினம் இராகலை காவல்நிலை அதிகாரிகள் டெல்மார் மேற்பிரிவில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த குறித்த வியாபாரி மற்றும் அவரது உறவினர்களால் உரம் பதுக்கி வைத்திருந்த விடயத்தை அம்பலப்படுத்தியது இராமசந்திரனே எனத் தெரிவித்து அவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.

சம்பவம்  தொடர்பில் இராகலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக, தாக்குதலுக்குள்ளான பரமசிவன் இராமசந்திரனின் சகோதரி தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ள விடயத்தை உறுதிப்படுத்திய பொலிஸார் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை எனவும் அது தொடர்பில் விசாரணை இடம்பெறுவதாகவும்  தெரிவித்துள்ளனர்.

இதேவேளை குறித்த வியாபாரியிடம், பரமசிவன் இராமசந்திரன் சாரதியாக பணியாற்றி வருகின்றதாக தெரிவிகப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.



No comments