Header Ads

test

ரிஷாட்டின் கைது தொடர்பில் அரசாங்கம் வெளியிட்ட தகவல்.

இலங்கையில் கடந்த 2019ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் உள்ளிட்டோர் தடுத்து வைக்கப்பட்டுள்ள விவகாரத்தில் அரசியல் நோக்கங்கள் கிடையாது என்று அரசாங்கம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

நீதிமன்றமே இது தொடர்பில் சுயாதீனமாக தீர்மானித்து நடவடிக்கை எடுக்கும் என்று அமைச்சரவை பேச்சாளரும், வெகுசன ஊடக அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.

அமைச்சரவையின் தீர்மானங்களை அறிவிக்கும் வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பு கொழும்பில் உள்ள அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நேற்றைய தினம் நடைபெற்றது. இதன்போது அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

இலங்கையில் பரவலாக எதிர்கட்சியினரால் முன்வைக்கப்பட்டுவரும் முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனின் கைதானது, அரசியல் பழிவாங்கல் என்ற விவகாரம் குறித்து அரசாங்கம் நேற்றைய தினம் பதிலளித்துள்ளது.

குறிப்பாக உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் நிறைவடைந்துள்ள போதிலும் நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீன் மற்றும் அவரது சகோதரர் ஆகியோர் ஏன் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படாமல் தொடர்ந்தும் தடுத்து வைக்கபபட்டுள்ளனர்? என ஊடகவியலாளர்களால் வினவப்பட்டது.

இதற்கு பதில் அளித்த அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல,

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகள் நிறைவடைந்து சுமார் 3 நாட்கள் கடந்துள்ளன. இது சட்டரீதியான நிலைமையாகும். மாறாக பலவந்தமாக யாரையும் தடுத்து வைத்திருப்பதில்லை.

நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி , நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்ட காரணிகளுக்கமையவே அந்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். இது தொடர்பில் எம்மால் அழுத்தம் பிரயோகிக்க முடியாது.

நாட்டில் சுயாதீன பொலிஸ், சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் சுயாதீனமான நீதித்துறை காணப்படுகிறது. நீதிமன்ற செயற்பாடுகள் தொடர்பான தீர்மானங்கள் நீதிமன்றத்தினாலேயே எடுக்கப்படும் என்றார்.


No comments