Header Ads

test

நினைவு சின்னங்களை உடைத்து நல்லிணக்கத்தை தகர்த்துள்ளார்கள். முன்னாள் எம்பி சந்திரகுமார்.

 யுத்தத்திற்கு பின்னர் இந்த நாட்டில் நிலைத்திருக்க கூடிய சமாதானத்தையும், நல்லிணக்கத்தை ஏற்படுத்தி அனைத்து இன மக்களும் நிம்மதியாக வாழும் சூழலை ஏற்படுத்த வேண்டிய நிலையில் அதற்கு மாறாக இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கத்தை  தகர்க்கும் வகையிலும், காயப்பட்டுள்ள ஒரு இனத்தின் உணர்வுகளை சிதைக்கும் வகையிலும் முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னம் உடைக்கப்பட்டுள்ளது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும்,சமத்துவக் கட்சியின் பொதுச் செயலாளருமான மு.சந்திரகுமார் தெரிவித்துள்ளார்.

முள்ளிவாய்க்காலில் அமைக்கப்பட்டிருந்த நினைவுச் சின்னம் ஒன்று உடைக்கப்பட்டதோடு, நினைவுக்கல்லும்  காணாமல் ஆக்கப்பட்ட விடயம் தொடர்பில் அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

நினைவு கூரல் என்பது ஒரு சர்வதேச உரிமை, அதுவொரு பண்பாட்டு உரிமையும் கூட இந்த உரிமையை எவரும் தடுத்துவிட முடியாது. நிலைமாறுகால நீதி பொறிமுறையிலும் நினைவு கூரல் வலியுறுத்தப்பட்டுள்ளது. அதனை இலங்கை அரசும் ஏற்றுக்கொண்டுள்ளது. 

இந்த நிலையில்  இவற்றுக்கு மாறாக ஒரு இனத்தின் ஆன்மாக்களை உடைத்து தகர்ப்பது போன்று முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னங்கள் உடைக்கப்பட்டமை மிகவும்  வேதனைக்குரியதும்,கண்டனத்திற்குரியதும் ஆகும்.

தமிழ் மக்கள் இழந்த தங்கள் உறவுகளை நினைவு கூர்வதற்கு உரிமையுடைவர்கள் அந்த உரிமையை எவரும் தடுக்க முடியாது, நினைவு கூர்வதன் மூலம் மனக்காயங்களை ஆற்றிக்கொள்ள முடியும். இன்றைய சூழலில் காயங்கள் ஆற்றப்படுவது அவசியமானது. எனவே அவற்றுக்கு நினைவு கூர்தல் மிகவும் இன்றியமையாதது என அவர்  தெரிவித்துள்ளார்.

குருந்தூர்மலையில் கொரோனா சுகாதார நடைமுறைகளை மீறி இராணுவத்தின் பாதுகாப்புடன் நிகழ்வுகளை நடாத்த முடியும் என்றால் ஏன் மே 18 இல் முள்ளிவாய்க்காலில் சுகாதார நடைமுறைகளுக்கு அமைவாக யுத்தத்தில் கொல்லப்பட்ட அப்பாவியான தங்களது உறவுகளை தமிழ் மக்கள் நினைவு கூர முடியாது?  இன ரீதியான பாரபட்சத்தை கடந்து இனங்களின்  உணர்வுகள் புரிந்துகொள்ளப்பட்டு செயற்பாடுகள் முன்னெடுக்கப்படவேண்டும் என்பதோடு,தமிழ் மக்களின் நினைவு கூரும் உரிமையை எவரும் தடுக்க கூடாது என்பதனையும் வலியுறுத்துகின்றேன் எனத் தெரிவித்துள்ளார்.


No comments