Header Ads

test

அம்பாறையில் உள்ள சங்கமன்கண்டியில் கண்டுபிடிக்கப்பட்ட வரலாற்றுச் சின்னங்கள்.

 அம்பாறையில் உள்ள சங்கமன்கண்டி என்னுமிடத்தில் முக்கிய வீதியிலிருந்து மேற்குப் புறமாக சுமார் 3km தூரத்தில், ஏராளமான பண்டைய சின்னங்கள் காணப்படுகின்றன.

அவற்றில் சில சின்னங்கள் கி.மு 2ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை என்றும், சில சின்னங்கள் கி.பி 8ஆம் நூற்றாண்டை சேர்ந்தவை என்றும் வரலாற்றுத்துறை பேராசிரியரும் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக வேந்தருமான எஸ்.பத்மநாதன் ஊடகம் ஒன்றிற்கு உறுதிப்படுத்தியுள்ளார்.

மேலும் அவர் கூறியதாவது,

"இப்பகுதியில் கல்வெட்டுக்கள், நடுகல், கல்லறைகள், பாறைத்தூண்கள், மலைகளில் குடையப்பட்ட நேர்த்தியான குழிகள் மற்றும் நீர்த் தொட்டிகள் உள்ளிட்ட ஏராளமான பண்டைய சின்னங்களை இன்னும் காணக் கிடைக்கின்றன.

அந்த வகையில் 'நடுகல்' இங்கு காணப்படுகின்றமையினை வைத்து, கி.மு 2ஆம் நூற்றாண்டிற்கு முற்பட்ட காலத்தில், தமிழ் மொழியைப் பேசிய பெருங்கற் பண்பாட்டு மக்கள் இங்கு பரவியிருந்தார்கள் என்பதை திடமாகக் கூறலாம்.

இறந்தவர்களின் நினைவாக அமைக்கப்படும் 'நடுகல்' இங்கு காணப்படுகின்றமையினைத., 'நடுகல்' என்பது, ஆதி இரும்புக்காலம் என்று சொல்லப்படுகின்ற - பெருங்கல் பண்பாட்டுச் சின்னங்களில் ஒன்றாகும்.

ஈமத்தலங்களில் அமைக்கப்பட்ட நான்குக்கும் மேற்பட்ட கல்லறைகள் இப்பகுதியில் காணப்படுகின்றன.

இவை நீள் சதுரமான வடிவுடையவையாகும். அந்த கல்லறையை நீளமான ஒரு கல்லினைக் கொண்டு மூடி விடுவார்கள். அதனை தொப்பிக் கல் (Doll men) என்று சொல்வார்கள்.

இந்த 'தொப்பிக்கல்'கள் இங்கு காணப்படுவதை வைத்தும், கிறிஸ்துவுக்கு இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னர் இங்கு தமிழ் மொழி பேசிய மக்கள் வாழ்ந்ததை உறுதிப்படுத்த முடியும்" என பேராசிரியர் பத்மநாதன் தெரிவித்திருந்தார்.

இதனை உறுதிப்படுத்தும் வகையில், அங்கே கிடைக்கப்பெற்ற பானையோடு ஒன்றில் தமிழி எழுத்து காணப்பட்டதாகவும், இதனை தென்னிந்திய ஆய்வாளர்களும் அக்காலத்தில்(2012) உறுதி செய்தனர் என்றும் கிடைக்கப்பெற்ற தொல்லியல் ஆதாரங்களின் அடிப்படையில், கி.மு 04 நூற்றாண்டுகளுக்கு முன்னரே, தமிழ் - எழுத்து வடிவம் பெற்றுள்ளதாகவும் பேராசிரியர் பத்மநாதன் சில வருடங்களுக்கு முன்னர் கூறியுள்ளார்.

அந்த வகையில், ஆதி இரும்புக்காலம் என்று சொல்லப்படுகின்ற பெருங்கற்காலத்தில் தமிழ் பேசிய மக்கள் வாழ்ந்தமைக்கான ஆதாரங்களும், தமிழி எழுத்துக்களும் கிடைக்கப் பெற்றுள்ள இடத்தையும், அங்கு காணப்படுகின்ற தொல்லியல் சின்னங்களையும் பாதுகாக்க வேண்டியமை இலங்கை அரசின் கடமையாகும்.

சங்கமன்கண்டி பகுதியின் வரலாற்றுத் தொன்மைகள் பற்றி இப்போதுள்ள பெரும்பாலானோருக்குத் தெரியாதுள்ளது. இவ்விடமானது தற்சமயம் காடுபற்றிப்போயிருக்கின்றது.

இந்தப் பகுதியில் காணப்படும், தமிழ் மொழியைப் பேசிய பெருங்கற் பண்பாட்டு மக்கள் வாழ்ந்தமைக்கான தொல்லியல் ஆதாரங்கள் சூறையாடப்பட்டும், அழிவடைந்தும் வருகின்றன.

அதற்கு மிக முக்கிய காரணம் பௌத்த சிங்கள தொல்பொருள் அடையாளங்கள் மட்டுமே சிறீலங்காத் தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்டு வருகின்றமையே என்கின்றனர் இவ்விட மக்கள்.

இந்த வரலாற்று தொன்மைக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டிருந்தால் குறித்த குறிஞ்சியிடம் காடுவளர்ந்த அச்சம்மிக்க பகுதியாக மாறியிருக்காது; மக்களும் இதனை நன்கு அறிந்திருப்பர்....

ஒரு சில மேதாவிகள் போயும் போயும் இதுக்குள்ள புதையல் தோண்டுகிறார்கள் என்பதுதான் இங்கு வேடிக்கையே.




No comments