Header Ads

test

கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் நாகேந்திரம் செல்வநாயகத்தை பயங்கரவாத தடுப்பு பிரிவினர் விசாரணைக்கு அழைப்பு - கரைச்சி பிரதேச சபை அமர்வில் அமைதிவழி போராட்டம்.

 கரைச்சி பிரதேச சபை உறுப்பினர் நாகேந்திரம் செல்வநாயகத்தை பயங்கரவாத தடுப்பு பிரிவினர் விசாரணைக்குட்படுத்த அழைக்கப்பட்டமையை கண்டித்து பிரதேச சபை அமர்வில் அமைதிவழி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

கரைச்சி பிரதேச சபை அமர்வு இன்று காலை 9 மணிக்கு ஆரம்பமானது. இதன்போதே சபையின் உறுப்பினர் விசாரணைக்காக அழைக்கப்பட்டமையை கண்டித்து போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன் போது,

யாரையும் விசாரணைக்கு உட்படுத்துவதற்கு நாம் தடை அல்ல எனவும், அவ்வாறு விசாரணைக்கு உட்படுத்துவதாயின் கிளிநொச்சி மாவட்டத்திலேயே விசாரணைக்குட்படுத்த வேண்டும் எனவும் குறிப்பிட்டு, குறித்த போராட்டத்தை முன்னெடுப்பதற்காக சபை உறுப்பினர் ஜீவராசா சபையிடம் கோரிக்கை முன்வைத்தார். அனைத்து உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்ததை அடுத்து சபை 5 நிமிடங்கள் ஒத்தி வைக்கப்பட்டது.

இதன்போது சபை மண்டபத்திலேயே போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. குறித்த போராட்டத்தை செய்தி அறிக்கையிடுவதற்காக ஊடகவியலாளர்களிற்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

கரைச்சி பிரதேச சபையின் உறுப்பினரான நாகேந்திரம் செல்வநாயகம் இன்று கொழும்பில் உள்ள பயங்கரவாத தடுப்பு பிரிவிற்கு அழைக்கப்பட்டிருந்ததாகவும், குறித்த செயற்பாடானது மக்கள் பிரதிநிதிகளை அச்சுறுத்தும் வகையில் அமைந்துள்ளதாகவும் தெரிவித்து இன்றைய அமர்வில் பிரேரணையும் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது.

குறித்த பிரேரணை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு ஏகமனதாக நிறைவேற்றப்பட்டிருந்ததுடன், இன்றைய தினம் குறித்த பிரதேச சபை உறுப்பினர் விசேட விடுமுறை பெற்று விசாரணைகளிற்காக சென்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.






No comments