Header Ads

test

மாற்றுத் தலைமை என்பது மாற்றி மாற்றி பேசுவதல்ல. - அகரன்.!!!

மாற்றுத் தலைமை என்பது மாற்றி மாற்றி பேசுவதல்ல -  அகரன்.!!!
மாற்றுத் தலைமை என்பது மாற்றி மாற்றி பேசுவதல்ல என்பதை யாராவது விக்கி ஐயாவுக்கு எடுத்துச் சொல்லமாட்டினமா? அண்மையில் விக்கினேஸ்வரன் அவர்கள் வெளியிட்டு வரும் கருத்துக்கள் தமிழ் மக்களை முகம் சுழிக்கச் செய்துள்ளது. குறிப்பாக கோத்தபாய ஜனாதிபதியாக வரவேண்டும் அவ்வாறு ஜனாதிபதியாக வந்தால் சர்வதேச சமூகம் இலங்கைக்கு நெருக்கடி கொடுக்கும் இதனால் தமிழர்களுக்கு ஒரு தீர்வு கிடைக்கும் என்று கூறியிருந்தார்.

எனவே விக்கி அவர்கள் தனது நிலையை உணர்ந்து அவசரப்படாமல் நிதானத்துடனும் முன்னுக்குப் பின் முரணில்லாமலும் கருத்துக்களை வெளியிட வேண்டும்.ஊடகங்களும் ஊடகவியலாளர்களும் கேட்கும் அனைத்து கேள்விகளுக்கும் பதில் சொல்ல வேண்டும் என்ற அவசியம் கிடையாது என்பதை அவருக்கு அருகில் இருப்பவர்கள் எடுத்துச் சொல்ல வேண்டும்.

தமிழரசுக் கட்சியின் மேலாதிக்கமும் அதன் தவறான கொள்கையும் மக்கள் விரோதப் போக்கும் அணுகுமுறைகளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளின் கையாலாகத் தனமுமே ஒரு மாற்றுத் தலைமையைப் பற்றி சிந்திக்க வைத்துள்ளது. இதற்கு சரியான ஒரு குறியீட்டைத் தேடும்போது கிடைத்தவர்தான் வடக்கு மாகாணசபையின் முன்னாள் முதல்வர் விக்கி.

2015ஆம் ஆண்டு ஜெனிவாவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பெயரால் தமிழரசுக் கட்சி மேற்கொண்ட நடவடிக்கையால் மனமொடிந்துபோன விக்கி அன்றிலிருந்து மக்கள் நலனில் அக்கறை செலுத்துபவராகவும் தன்னை அரசியலுக்கு அழைத்தவர்கள் என்றும் பாராமல் தமிழரசுக் கட்சியின் தவறான செயற்பாட்டை தட்டிக் கேட்பவராகவும் தன்னை அடையாளப் படுத்திக்கொண்டார். இலங்கைத் தமிழரசுக் கட்சியும் விக்கியும் ஒரே வர்க்க குணாம்சத்தைக் கொண்டுள்ள போதிலும் குட்டி முதலாளித்துவ போட்டியில் இத்தருணத்தில் தமிழ்த் தேசிய இனம் சார்ந்து முடிவெடுக்க வேண்டியிருப்பதால் விக்கி ஐயாவை மாற்றுத் தலைமைக்கான ஒரு குறியீடாக தமிழ்ச் சமூகம் ஏற்க வேண்டியுள்ளது. இதன் பொருள் அவர் அரசியல் ரீதியில் சரியானவரென்பதோ அல்லது அனுபவமிக்கவர் என்பதோ அல்ல.

தமிழரசுக் கட்சியின் மக்கள் விரோத செயற்பாடு தமிழ் மக்களின் இருப்பையே கேள்விக்குறியாகிவிடும் சூழல் நிலவுகையில், அழிவின் விளிம்பில் இருக்கும் தமிழ்த் தேசிய இனத்தின் இருப்பையும் அடையாளத்தையும் காப்பதற்கும் அதன் உரிமைப் போராட்டத்தை உயிர்ப்புடன் வைத்திருப்பதற்கும் ஒரு மாற்று அரசியல் அணுகுமுறை தேவைப்படுகிறது. அதற்கு தமிழரசுக் கட்சி தயாராக இல்லாததால் மாற்று அணி ஒன்றினை உருவாக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இன்றைய சூழலில் தமிழரின் நிலையை எடுத்துரைப்பதற்கு நீதித்துறையில் நீதியரசராகப் பணியாற்றியவரும் தமிழ்த் தேசிய இனத்தின் உரிமைகளை வென்றெடுக்க வேண்டும் என்ற அவாவினைக் கொண்டிருப்பவருமான விக்கி ஐயாவை தமிழ்த் தலைமைகளை ஐக்கியப்படுத்தும் ஒரு குறியீடாக முன்னிலைப்படுத்த வேண்டிய தேவை எழுந்துள்ளது. எனவே அவர் தமிழ்த் தேசிய இனத்தின் குரலை வலிமையுடன் எடுத்துச் சொல்பவராகச் செயற்படவேண்டும்.

தமிழரசுக் கட்சியைப் போன்று இவரும் தன்னிச்சையாக முடிவுகளை மேற்கொள்ளாமல் இன்றைய இக்கட்டான சூழலில் தமிழ்த் தேசிய இனத்தின் உரிமைகளை வென்றெடுப்பதில் பற்றுறுதியுடன் செயற்படுபவர்களுடன் இணைந்து கருத்துக்களை வெளியிடுவதே சிறந்தது.

மக்கள் தமது அபிலாசைகளை முன்னிறுத்தி தாமே போராட வேண்டிய நிர்ப்பந்தத்தில் உள்ளனர். எனவே மக்களின் போராட்டத்தை மழுங்கடித்துவிடாமல் சரியான அணுகுமுறையில் அவர்களின் அபிலாசைகளை எடுத்தியம்பக்கூடிய தகைமையை முன்னாள் முதல்வர் வளர்த்துக்கொள்ள வேண்டும். கடந்த தேர்தல்களில் மக்கள் முடிவெடுத்துவிட்டனர் நாம் அவர்களின் முடிவை நடைமுறைப்படுத்தினோம் என்று கூறியவர்கள் இன்றும் அவ்வாறே நடந்துகொள்ள வேண்டும்.

ஆயுதப் போராட்டத்திலிருந்து பாராளுமன்ற ஜனநாயகப் பாதைக்குத் திரும்பிய அரசியல் சக்திகள் தமக்கிடையில் ஒரு கூட்டுத் தலைமையை ஏற்படுத்திக்கொள்ளத் தவறியதன் விளைவே இன்றைய அவல நிலை அனைத்திற்கும் காரணம். இதன் காரணமாகவே விக்கி ஐயாவை ஐக்கியத்திற்கான குறியீடாக காலம் கண்டறிந்துள்ளது.
எனவே, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பிலும்சரி, புதிய மாற்று அணி தொடர்பிலும்சரி, எதிர்கால அரசியற் செயற்பாடுகள் தொடர்பிலும்சரி அவசரப்பட்டு கருத்துக்களை தெரிவிக்காமல் முடியுமானால் ஒரு உத்தியோகபூர்வ பிரச்சாரப் பிரிவை ஏற்படுத்தி அதற்கு ஒரு பொறுப்பாளரை நியமித்து அவரின் ஊடாக கருத்துக்களை வெளியிடுவது சாலச்சிறந்தது.

No comments