Header Ads

test

சிறைச்சாலைகள் கட்டமைப்பைப் பாதுகாப்பதற்குரிய வலுவான ஒரு நிலை இல்லாமையே சிறைச்சாலைக்குள்ளிருந்தும் போதைப்பொருள் வர்த்தகம் - டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு.!!!

சிறைச்சாலைகள் கட்டமைப்பைப் பாதுகாப்பதற்குரிய வலுவான ஒரு நிலை இல்லாமையே சிறைச்சாலைக்குள்ளிருந்தும்  போதைப்பொருள் வர்த்தகம் - டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு.!!!


பாரிய நிதிக் குற்றங்கள் மற்றும் ஊழல், மோசடி தொடர்பிலான வழக்கு விசாரணைகளைத் துரிதப்படுத்துவதற்காக எனக் கூறப்பட்டுக் கொண்டு வரப்பட்ட மூன்று நீதிபதிகள் அடங்கிய விசேட நீதிமன்றத்தால் இதுவரையில் எத்தனை வழக்குகள் விசாரித்து முடிக்கப்பட்டுள்ளன? என்ற கேள்வி எழுகின்றது.

தேர்தல் காலங்களின்போது சில வழக்குகளைத் துரிதப்படுத்தப் போவதாக ஊடகங்களிலே அடிக்கடி தகவல்களைக் காண முடிகின்றன. பின்னர் காலப் போக்கில் இன்னொரு தேர்தல் வரும்போதுதான் அதே வழக்குகள் மீண்டும் துரிதமாக்கப்படவுள்ளதாகக் கூறப்படுகின்றன.

அந்த வகையில் இத்தகைய தேர்தல் காலத்திற்குரிய வழக்குகள் எனத் தனியான ஒரு வகை வழக்குகளும் இந்த நாட்டிலே இருப்பதாகவும் தெரிய வருகின்றது. எனினும், அவற்றில் கூட எதுவும் இதுவரையில் தீர்ந்ததாகவும் இல்லை.

எனவே, வழக்குகளைத் தாமதப்படுத்துதல் என்பதற்கும் வழக்குகளைத் துரிதப்படுத்துதல் என்பதற்கும் இடையிலான வித்தியாசங்களை இங்கே நன்குணர்ந்து கொள்ளல் அவசியமாகும்.
இன்றைய தினம் நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு இந்த விவாதத்திலே சம்பந்தப்பட்டிருப்பதால், மேலுமொரு விடயம் தொடர்பிலும் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.

சிறைச்சாலைகளிலே இருந்து கொண்டு இந்த நாட்டிலே போதைப் பொருள் வர்த்தகம் பாரிய பரிமாணத்திலும் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அடிக்கடி தகவல்கள் வெளியாக்கப்பட்டு வருகின்றன. இதன் காரணமாகவே இந்த நாட்டில் மீண்டும் மரண தண்டனை கொண்டு வரப்பட வேண்டும் என்றும் கூறப்படுகின்றது.

அதாவது, இந்த நாட்டின் சிறைச்சாலைகள் கட்டமைப்பைப் பாதுகாப்பதற்குரிய வலுவான ஒரு நிலை இல்லாததையே இந்தக் கூற்றுகள் எடுத்துக் காட்டுகின்றன. எனவே, இவ்வாறு பாதுகாப்பற்ற ஒரு கட்டமைப்பினைச் சிறைச்சாலைக் கட்டமைப்பு எனக் கூற முடியுமா? என்ற கேள்வி எமது மக்கள் மத்தியில் எழுவதிலும் நியாயமிருக்கின்றது.

எனவே, முறைப்படுத்தப்படாமல் சட்டங்கள் நடைமுறைப் படுத்தப்படுவதனால்தான் இத்தகைய மிக மோசமான நிலை இந்த நாட்டுக்குள் உருவாகியிருக்கின்றது.

சிறைக்குள் இருப்பவர்களால் சர்வதேச ரீதியின் ஊடாகவும் இந்த நாட்டில் பாரியளவிலான போதைப் பொருள் விற்பனைகள் மேற்கொள்ளப்படுமானால், வெளியில் இருப்பவர்களால் அதைவிட அதிகளவில் மேற்கொள்ளப்பட முடியாது எனக் கூற முடியுமா? எனக் கேட்க விரும்புகின்றேன்.

எனவே, போதைப் பொருள் கடத்தல்கள் தொடர்பில் கைது செய்யப்பட்டு, சிறைச்சாலைகளில் அவர்களைத் தடுத்து வைத்திருப்பதால் எவ்விதமான பயனும் இல்லை என்றே கருத வேண்டியுள்ளது.

அதேநேரம், போதைப் பொருள் காரணமாக, அல்லது சிறு அளவிலான போதைப் பொருள் விற்பனை காரணமாக சிறைக்குச் செல்வோர்களில் பலரும் பாரிய போதைப் பொருள் விற்பனையாளர்களாக வெளியே வருகின்ற நிலைமைகளும் இல்லாமல் இல்லை.

மறுபக்கத்தில் இந்த நாட்டிலே தர்மசக்கரத்திற்கும், கப்பல் சுங்கானுக்கும் - புத்த பெருமானின் தலைக்கும், ஆந்திர மாநிலத்தில் வழிபடப்படுகின்ற மகவீர் ஜயந்தி என்கின்ற தெய்வத்தின் தலைக்கும்  வித்தியாசங்கள் தெரியாதவர்களால் சட்டமும், ஒழுங்கும், நீதியும் இந்த நாட்டில் நிலைநாட்டப்பட்டுக் கொண்டும் இருக்கின்றது.

நீதித் தேவதையின் கண்கள்தான் கட்டப்பட்டுள்ளனவே தவிர நீதியை நிலைநாட்டுபவர்களது கண்கள் கட்டப்படவில்லை  என்பதை இவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் என தெரிவித்துள்ளார்.

No comments