Header Ads

test

இலங்கையில் நீதித்துறை செத்துவிட்டதா.? தமிழரசு கட்சியின் இளைஞரணி கேள்வி.!!!

இலங்கையில் நீதித்துறை செத்துவிட்டதா.? தமிழரசு கட்சியின்  இளைஞரணி கேள்வி.!!!

இன்று (23) முல்லைத்தீவு நீராவியடி பிள்ளையார் ஆலயத்தின் தீர்த்தக்கேணிக்கு அருகாமையில் உயிர் இழந்த பௌத்த தேரரின்  உடலை தகனம் செய்தமையானது ஒரு அநாகரிகமான செயல் என்பதுடன், இந்து சமயத்தின்  புனிதத் தன்மையை கெடுக்கின்ற ஒரு செயலென்பது மட்டுமல்லாமல், இந்துக்களின் விழுமியங்களை மதிக்காத செயலாகவும்  காணப்படுகின்றது.

குறித்த விடயம் தொடர்பாக - நீதிமன்றத்தின் தீர்ப்பையும் மீறி இடம்பெற்றுள்ள  நாகரீகமற்ற செயற்பாடு ஒட்டுமொத்த நாட்டினுடைய நீதித்துறைக்கு அபகீர்த்தியை ஏற்படுத்தியுள்ளது.

இது மட்டுமல்லாமல் நீதித்துறையின் தீர்ப்பு தொடர்பாக விளக்க முற்பட்ட சட்டத்தரணி சுகாஸ் அவர்களை, தாக்கியமை மிகவும் கண்டிக்கத்தக்க ஒரு செயலாக நோக்கப்படுகின்றது.

இவ் அநாகரீகமான செயற்பாட்டை இலங்கை தமிழரசுக்கட்சியின் இளைஞர் அணி வன்மையாக கண்டிக்கின்றது.

நாட்டில் நல்லாட்சி இடம்பெறுவதாக பேசப்பட்டுக் கொண்டிருக்கும் நேரத்திலும் கூட நாட்டினுடைய  நீதித்துறை  கேள்விக்கு உட்படுத்தப்பட்டு இருக்கின்றது, அல்லது நீதித்துறையின் தீர்ப்பு வலிதற்றதாக காணப்படுகின்றதா என்கின்ற ஐயப்பாடும்  எழுகின்றது. அல்லது இலங்கையில்  நீதி வடக்கு கிழக்குக்கு பொருந்தாதா? என்ற கேள்வியும் எமது தரப்பில் எழுந்துள்ளது.

தமிழர்கள் 30 வருடங்களாக ஆயுதம் ஏந்திப் போராடியது ஏன் என்கின்ற கேள்விக்கான பதில் கிடைக்கின்ற நேரமாக இந் நேரத்தை நாம் நோக்குகின்றோம்.

எமது தாயக பூமியான வட,கிழக்கு பகுதியில் எமது  மதத்தை பின்பற்றுகின்ற உரிமைகூட இந்த நாட்டினுடைய பேரினவாத சக்திகளால் மறுக்கப்படுகின்ற ஓர் நிலைமை இன்று ஏற்பட்டிருக்கின்றது.

இவ்வாறான நிலைமை தொடருமாக இருந்தால் தமிழ் மக்கள் வேறு விதமான போராட்ட வடிவத்துக்குள் தங்களை நகர்த்த வேண்டிய சூழல் ஏற்படும், ஆகவே இதை உணர்ந்து பௌத்த மேலாதிக்க சிந்தனை கொண்டவர்கள்  அச்  சிந்தனையில் இருந்து மேலெழுந்து, தமிழர்களும் ஜனநாயக ரீதியாக இந்த நாட்டில் வாழக்கூடிய சூழலை ஏற்படுத்துவதற்கு முனைய வேண்டும்.என
இலங்கை தமிழரசு கட்சியின் இளைஞர் அணிச் செயலாளர் சுப்பிரமணியம் சுரேன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

No comments